பக்கம்:எக்கோவின் காதல்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

93

“ஒன்றுமில்லை ”.

“ஒன்றுமில்லையா? என்னிடம் கூட மறைத்துப் பேசுகின்றீர்களே" என்று கெஞ்சிக்கேட்டாள் கமலம்.

“அஃது .என் ..சொந்த... ஊரில் ....ஒன்றுமில்லை . கமலா! அங்குப் பாடிய பாட்டு-சுயமரியாதைப் பாட்டு இருக்கிறதே அஃது என் வாழ்நாளில் முக்கிய பகுதியைப் பற்றிக் கொண்டுள்ள பாட்டு. எனது இறந்த கால எண்ணங்களைத் தூண்டிவிட்டது. அதைப் பற்றி ஒன்றுங் கேட்காதே கமலா! பைத்தியம் பிடித்து விடும்போல் இருக்கிறது. சமயம் நேரும்போது சொல்லுகிறேன்”

நான் எனது தமிழகத்தை - சென்னையை விட்டுச் சிங்கப்பூருக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்றன. கடைகளில் கணக்கெழுதி அதனால் வரும் ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தேன். அங்கு நான் இருந்த வீட்டின் எதிர்வீட்டுப் பெண் தான் கமலம். அவளுக்கும் எனக்கும் காதல் எப்படியோ தோன்றி - வளர்ந்து - முற்றிப் பலனளிக்கத் தொடங்கிவிட்டது. இப்பொழுது அவள் என் காதலியில்லை ; மனைவி.

அவள் பல முறை 'சுயமரியாதை'ப் பாட்டு சம்பந்தமாக நிகழ்ந்ததைக் கேட்பாள். கேட்கும் பொழுதெல்லாம் நான் மழுப்பி விடுவேன். அந்தப் பாட்டுத்தான் என்னைக் கொலைக்காரன் ஆக்கியது. நான் கொலைக்காரன் என்று தெரிந்தால் அவள் என்ன நினைப்பாளோ என்ற அச்சத்தால் அதைப் பற்றிக் கூறவேயில்லை.

ஒருநாள் என் கடிகாரத்தைக் காணவில்லை . “கமலம்! கடிகாரத்தைப் பார்த்தாயா?” என்றேன்.