பக்கம்:எங்கே போகிறோம்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கால்நடைப் பொருளாதாரச் சிந்தனைகள் ◯ 103

ஆகவே, மாடுகளின் வளர்ச்சிப் பருவமாகிய கன்றுகளாக இருக்கும் பருவ காலத்தில் நல்ல ஊட்டச்சத்துக்கள் கொடுத்து நன்றாக வளர்க்கவேண்டும். கன்றுகளுக்கும் புரதச் சத்துள்ள உணவு அதிகம் தேவை.

ஒரு பால்மாடு சராசரி தினசரி 10 முதல் 15 லிட்டர் வரை பால் கொடுக்காது போனால் பால்மாடு வளர்த்தல் தொழில் ரீதியாக அமையாது. பண வருவாய் குறையும்; செலவு கூடும். சராசரி 8 லிட்டராவது கறக்கவேண்டும். 2 லிட்டருக்கும் பால் குறைந்தால் அந்தப் பால்மாடு வளர்ப்பவருக்குச் சுமையேயாகும்.

இஸ்ரேல் போன்ற நாடுகளில் 60 லிட்டர் வரை ஒரு மாடு கறக்கிறது. நமது நாட்டிலும் பழைய காலத்தில் குடத்தில் பால் கறந்ததாக ஆண்டாள் நாச்சியார் கூறுகின்றார். இப்போது பால் கறப்பது செம்புகளிலும், உழக்குகளிலும்தான்!

பால்மாட்டு வளர்ப்பு மிகவும் பொருளாதார அம்சம் உடையது. ஒரு பசுவின் கறவை மறவைக் காலம் அதாவது ஒரு கன்று ஈனுவதற்கும் அடுத்த கன்று ஈனுவதற்கும் உள்ள கால இடைவெளி குறையவேண்டும். சராசரி, ஓர் ஆண்டுக்கு ஒரு கன்று ஈனுதல் வேண்டும்.

ஆனால், நமது நாட்டில் 12 மாதம் முதல் 18 மாதம் வரைகூட, சினைபிடிக்கக் காலதாமதமாகிறது. கறவை மறவைக் காலத்தைக் குறைத்தால்தான் கால்நடை வளர்ப்பில் இழப்பைத் தவிர்க்க இயலும்.

இரு கன்றுகளுக்கிடையில் 60 நாள்கள் பால் வற்றியிருந்தால் போதுமானது. இப்போது நடைமுறையில் 60 முதல் 150 நாள்கள் வரையில் கறவை மறவை நீடிக்கிறது. பல இடங்களில் கூடுதலாகவும் இருக்கிறது.