பக்கம்:எங்கே போகிறோம்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116 O எங்கே போகிறோம்?

களிடம் உள்ள நிலம் மிகச் சிறிய அளவே. இந்த நிலத்தைக்கொண்டு அவர்களுடைய வாழ்க்கையை நடத்த இயலாது. ஆதலால், விவசாயிகள் ஆண்டுதோறும் கடன்படுகிறார்கள்.

இன்று விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரில் நான்கில் ஒரு பங்கினரை வேறு வேலைகளுக்கு மடை மாற்றம் செய்வது விவசாயப் பொருளாதாரத்திற்கு ஆக்கம் தரும். இங்ஙனம் வேறு தொழிலுக்கு மாறும்பொழுது கூட்டுப் பண்ணை முறையிருப்பின் அந்தப் பண்ணை அவருடைய நிலத்தை விவசாயம் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்.

ஆதலால், கூட்டுப் பண்ணை முறை மிகவும் ஏற்றது, குறைந்த அளவு பயன்தரக்கூடிய விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தையாவது அமைத்து நமது வேளாண்மைப் பொருளாதாரத்திற்கு ஆக்கம் தந்து நமது நாட்டைத் தற்சார்புடையதாக்க வேண்டும்.

அடுத்து, நமது வாழ்க்கையில் இடம்பெறுவது உற்பத்தி செய்த பொருள்களை விற்பது. நமக்குத் தேவையான நுகர் பொருள்களை வாங்குவது. இவ்விரண்டும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பவை.

உற்பத்திப் பொருளுக்கு நியாய விலை கிடைக்க வேண்டும். இன்று அது கிடைப்பதில்லை. உற்பத்தியாகும் பண்டங்களை, பொருள்களைப் பாதுகாத்து சீரான விலைக்கு விற்கும் பணியையும், நுகர்வுப் பொருள்களை நியாயமான விலைக்குக் கிடைக்கச் செய்யும் பணியையும் செய்வது கூட்டுறவுப் பண்டக சாலை.