பக்கம்:எங்கே போகிறோம்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120 எங்கே போகிறோம்?

கூட்டுறவில் அங்கத்தினராகச் சேர்வதன் நோக்கம் பலரின் துணை கொாண்டு சுய நலத்தை நிறைவேற்றிக் கொள்ளுதல். அதுபோலவே பலருக்கு இவரும் உதவ வேண்டும். பரஸ்பர உதவியின் மறுபெயரே கூட்டுறவு.

கூட்டுறவாளனின் விருப்பமும், விழைவும், பிறர் நலம் சார்ந்ததாகவே இருக்கும். கூட்டுறவாளன் பிறருக்குச் செய்யும் உதவியைக் கடமையாகவே கருதுவான். அந்த உதவிக்குக் கைம்மாறாகப் பிறிதொரு உதவியையோ, நன்றியையோ, பாராட்டுக்களையோ எதிர்பார்க்கக் கூடாது.

கூட்டுறவாளன் எப்போதும் சொல்ல முந்தமாட்டான்; கேட்பதிலேயே ஆர்வம் காட்டுவான்; அவசியம் ஏற்படும்பொழுது சில சொல்லுவான்; பலர் வாயிலாகவும் கேட்கவே விரும்புவான். கூட்டுறவாளனின் உரிமைகள் பின் தள்ளப் பெறும்! எந்தச் சூழ்நிலையிலும், கடமைகளே முன் நிற்கும்! எல்லோருடனும் ஒத்துப் போவதே கூட்டுறவாளனின் கடமை.

செல்வத்தைச் சம்பாதிப்பதால் மட்டும் செல்வராகி விடமுடியாது, அப்படிச் செல்வரான வரலாறும் இல்லை. வருவாய்க்கு ஏற்ற வாழ்க்கை, செலவு ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம்தான் செல்வராக முடியும்.

வரவு-உத்தரவாதமில்லாதது. கையில் வந்த அல்லது வரப்போகிற உத்தரவாதம் செய்யப் பெற்ற வரவுக்கேற்ப செலவு செய்ய வேண்டும்; சிக்கனப்படுத்த வேண்டும். அதேபோழ்து நலமுடைய வாழ்க்கையும் நடத்த வேண்டும்.

அதனால்தான் கூட்டுறவில், முதலில் பண்டக சாலைகள் தோன்றின. நியாயவிலையில் கலப்பட மில்லாத,