பக்கம்:எங்கே போகிறோம்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146 எங்கே போகிறோம்?

பாரி ஆண்டான். பாரி இயற்கையை - தாவர இனங்களை மிகவும் கவனமாகப் போற்றியதன் விளைவே முல்லைக் கொடிக்குத் தேரீந்தது. அதனாலேயே அவனுடைய பறம்புமலை உழவர் உழாதன நான்கு பயன் உடையதாக விளங்கியது. அந்நான்காவன; வள்ளிக்கிழங்கு, மூங்கில் அரிசி, பலாப்பழம், தேன்.

ஆதலால், ஒரு நாடு பொருளாதாரத்தில் மேம்பாடுற்று விளங்கவேண்டுமாயின் வேளாண்மைப் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும். நம்முடைய நாடு, இன்னமும் உண்வுப் பொருள்களில் தற்சார்புடையதாக இல்லை! நாம் அங்காடிப் பொருளாதாரத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோம். இது தவறு. உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

இயற்கைப் பொருளாதாரத்திற்கு-அதுவும் குறிப்பாக வேளாண்மைப் பொருளாதாரத்திற்கு நீர்வளம் தேவை. “நீரின்றமையாது. உலகம்” என்றது திருக்குறள். தண்ணீருக்கு மூலம் மழை. மழைநீரைச் சேகரித்தல் வேண்டும். கழனிக்குத் தண்ணீரைக் கொண்டுவந்து சேர்ப்பது வாய்க்கால், “நீர் வழங்கும் வாய்த்தலைகளை யுடைய மிழலைக் கூற்றம்” என்று மாங்குடிமருதனார் பாடியமை அறிக.

நீர்வளம் சேர்ப்பவை வாத்துக்கால்கள். மழைதரும் தண்ணீர் வளத்தைச் சேமித்துக் காக்கும் பழக்கம் தேவை. தண்ணீரைச் செல்வம் என்றே அப்பரடிகள் கூறுகின்றார். “ஏரி நிறைந்தனைய செல்வன்” என்பது அப்பரடிகள் வாக்கு.

பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடிய பொழுது உடலுக்கு உணவு, உணவு என்று சிறப்பித்துக் கூறப்படுவது நிலத்தொடு கூடிய நீர்.