பக்கம்:எங்கே போகிறோம்.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168 எங்கே போகிறோம்?

கள் அமையும்; வாழ்க்கையின் முடிவில் கழிவிரக்க நிலை தோன்றும். இந்த அவலத்தைத் தவிர்த்துக்கொள்ள வேண்டாமா? எங்கே போகிறோம்?

எது நமது வாழ்க்கையின் குறிக்கோள்? “மானுடம்” அற்புதமான பிறவி நான்கு சுவர்களுக்குள் அடங்கிய குடும்பத்திற்காக மட்டுமா இவ்வளவு பெரிய மானுடப் பிறவியை இறைவன் வழங்கியிருப்பான்? தான் உண்டு, தான் வாழ்தல் அவசியம்; திருமணம் நிகழ வேண்டும்; வாழ்தல் வேண்டும்; அடுத்த தலைமுறைகள் தோன்ற வேண்டும்; எல்லாம் நடக்க வேண்டும்; நன்றாகவே நடக்க வேண்டும்.

ஆயினும் வீட்டிற்கு வெளியே உள்ள உலகம் வெளிச்சத்தில் இருந்தால்தான் வீட்டிற்குள் வெளிச்சம் இருக்கும். சூரியன் எரிகிறது; உலகம் முழுவதற்கும் ஒளி தருகிறது; வாழ்வளிக்கிறது; சிமினியும் எரிகிறது. ஆனால் வெளிச்சம் குறைவு. தன்னைக் காட்டுகிறது; சுற்றிலும் கிடக்கும் சில பொருள்களைக் காட்டுகிறது. இன்று பலர் சிம்னி விளக்குப் போல வாழ்கின்றனர். பலரால் அவ்வளவுதான் முடியும்.

ஒரு சிலராவது வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தைப் பார்க்கக் கூடாதா? ஊருக்குப் பத்து பேர், ஊராரைப் பார்க்க, ஊரை வளர்க்க நேரமில்லாமலா போய்விட்டது? அல்லது ஆற்றல் இல்லாமல் போய் விட்டதா? அதெல்லாம் ஒன்றும் இல்லை. சுயநலம் ஒரு காரணம். மற்றவர் வாழவேண்டும் என்ற கவலையே பலருக்கு இல்லை. இன்னும் பலருக்கு அச்சம் பயம்! ஊருக்கு நல்லது சொன்னால் எவ்வளவு பேர் கேட்பார்கள்? பலர் கேட்க மாட்டார்கள். ஆதலால் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்குகின்றனர்.