பக்கம்:எங்கே போகிறோம்.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176 எங்கே போகிறோம்?

‘சுதந்திரம்’ விலைமதிக்க முடியாதது. உலகம் முழுவதும், பல நூறு ஆண்டு காலம் மக்கள் போராடிச் சுதந்திரத்தைக் கண்டனர். 18-ம் நூற்றாண்டில், பிரஞ்சு தேசத்தில் நடந்த புரட்சி, மனித குலத்திற்கு மூன்று மந்திரங்களை வழங்கின. அவையாவன சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன. இவையே இன்றைய மனித உலகத்தின் தாரக மந்திரங்கள். இதன் பின் உலகம், சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது.

இன்று நமது நாடு சுதந்திர நாடு நாமே, நமக்கென்று நம்மை ஆள்வதற்கென்று ஆட்சி அமைக்கின்றோம். இன்று நமது நாட்டில் சுதந்திரத்தின் அருமை பலருக்குத் தெரியவில்லை ஏன்-சுதந்திரத் திருநாளைக் கூட வீட்டு விழாவாக, பொது விழாவாக, மக்கள் கொண்டாடுவதில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகும் பழைய தீபாவளிதான் பெரிய விசேஷமாக இருக்கிறது. ஏன்-அரசு கூட துணி விலைச் சலுகைகளை சுதந்திர தினத்திற்குத் தரவில்லை. சுதந்திர தின விழாவை வீடுகளிலும், நாட்டு மக்கள் விரிவாகக் கொண்டாடுதல் வேண்டும்.

“நாமிருக்கும் நாடு நமது” என்ற உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 18 வயது நிரம்பியதும், ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்று வாக்காளராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். வாக்காளர்கள் தவறாமல், எந்தவிதமான தூண்டுதலும் இன்றி, கையூட்டும் இன்றி, வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். தவறாமல் எல்லோரும் வாக்களிப்பது என்ற கடமை மேற்கொண்டொழுகினால், கள்ளத்தனமாக ஒருவர் பெயரில் மற்றவர் வாக்களிக்க இயலுமா? அல்லது செத்தவர்தான் எழுந்து வந்து வாக்களிப்பாரா?