பக்கம்:எச்சில் இரவு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

மணலும் உண்டு. அந்த "ஈரத்தின் எல்லையில்" அன்றில் பறவை போன்றவனின் வீடுமில்லை. அன்னப் பறவை போன்றவளின் வீடுமில்லை.

மருதம்! அங்கே ஏர் பரந்த வயலும், நீர் பரந்த கழனியும்; நெல் மலிந்த மனைகளும், சொல் மலிந்த மன்றங்களும் உண்டு. அந்த 'வண்டல் மண்டலத்தில்' தான் அவன் வீடும் இருந்தது. அவள் விடும் இருந்தது.

அவள் வீடு, மிகச் சிறிய வீடு வைக்கோல் வேய்ந்த வீடு. அது, இரண்டு தங்கத் தகடுகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது.

அவன் வீடு ஈச்ச மரத்தின் இலைகள் வேய்ந்த வீடு. அது, ஒரு முள்ளம்பன்றி எழுந்து நின்று கொண்டிருப்பதுபோல் இருந்தது.

அவன், இருபது நூற்றாண்டுகளில் இரண்டு நூற்றாண்டுகளைப் போன்றவன். அதாவது, வள்ளுவர் பிறந்த நூற்றாண்டையும் கரிகாற்சோழன் பிறந்த நூற்றாண்டையும் போன்றவன்.

பன்னிரண்டு போர்களுள் இரண்டு போர்களைப் போன்றவன். அதாவது, தலையாலங்கானத்துப் போரையும் வெண்ணிப் போரையும் போன்றவன்.

அவள், ஆறு பருவங்களுள் இரண்டு பருவங்களைப் போன்றவள். அதாவது, இளவேனிற் பருவத்தையும் கார்ப்பருவத்தையும் போன்றவள்.

ஏழு நாட்களுள் இரண்டு நாட்களைப் போன்றவள். அதாவது, திங்களும் செவ்வாயும் போன்றவள்.

நால்வகைப் பூக்களில் இருவகைப் பூக்களைப் போன்றவள். அதாவது, கோட்டுப் பூவையும் கொடிப் பூவையும் போன்றவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/39&oldid=1338425" இலிருந்து மீள்விக்கப்பட்டது