பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

எட்டு நாட்கள்


எட்டு நாட்களா? என்னைக் கொல்லும் துணிவு இவர்களுக்கு உண்டாக. எட்டு நாட்கள் தேவைப்படுகிறதா! பயங்கொள்ளிகள்!--என்றுதான் ஜியார்டானோ ப்ரூனோ, எண்ணிக்கொண்டிருப்பானே தவிர, ஐயோ ! எட்டு நாளிலே உயிர் இழக்கவேண்டுமா, என்று அஞ்சி இருக்கமுடியாது.

"நாத்திகனான உன்னைத் தீயிலிட்டுக் கொளுத்திச் சாகடிப்பது என்று தீர்ப்பளிக்கிறோம்" என்று அவர்கள் கூறிய போது, ப்ரூனோ பெருஞ் சிரிப்புடன் "இந்தத் தண்டனையைக் கேட்கும் எனக்கு அச்சம் இல்லை: இதைக் கூறும் உங்களுக்கு அச்சம் ஏன் இவ்வளவு இருக்கிறது!" என்று கேட்டான்.

அந்த நெஞ்சு உரத்தைக் குலைக்க, எட்டு நாட்களா! பேதைமை!!

என்றையதினம், ப்ரூனே உண்மையை உரைத்திடுவதே தன் பணி எனக் கொண்டானோ, அன்றே அவன் அறிவான். தன்மீது குறிவிழுந்துவிட்டது என்பதை எவ்வளவு காலத்துக்கு அவர்களிடமிருந்து தப்பித்திருக்க முடிகிறதோ அதுவரையில் தான் கண்ட உண்மையை உலகுக்குக் கூறிவருவது என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தான். அந்தத் திண்மையை, கொடுமைகள் தகர்க்க முடியவில்லை ! அவன் நாடு பல சுற்றி, பல அவைகளிலே நின்று, தன் கொள்கையைக் கூறினான்--போதுமான அளவுக்கு -- இனிச் சாக அஞ்சுவானேன். இறந்தால், கொள்கை இறந்து படவா செய்யும்! இல்லை. இல்லை. மாறாக, கொள்கை பன்மடங்கு புதுவலிவும் பொலிவும் பெறும்--வளரும்.