பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

உலக ஒளி


மரியாதை செய்வதையும், வேறு பல வெளிநாட்டுக்காரர்கள் வந்து தமது அன்பு வணக்கங்களைச் செலுத்திப் போவதையும் படங்களில் காண்கிறோம். இதன் பொருள் என்ன? வெளி நாட்டுக்காரர்கள் வந்து வணங்குவதன் சூட்சுமம் என்ன? அவர்களை எல்லாம் படம் எடுத்துப் பிரமாதமாக எழுதி. 'பார்! பார்!! அவர்கள் செய்யும் அஞ்சலியை' என்று பெருமையோடு வெளியிடுகின்றோமே, அவர்களெல்லாம் யார்? காங்கிரஸ்காரர்களா? காங்கிரசிலே இருந்தறியாதவர்கள்! அது மட்டு மல்ல காங்கிரசையே எதிர்த்தவர்கள்! இந்த நாட்டுக்குச் சொந்தமில்லாதவர்கள். வெளிநாட்டினர்!

அவர்களெல்லாம், காந்தியாரின் நினைவுச் சின்னத்தைக் கண்டு. பூரிப்புக் கொள்வதை விட--மரியாதை செய்வதை விட நான் செலுத்தும் அன்பு, எந்த அளவுக்குக் குறைந்தது என்று கூற முடியும்? அவர்களைவிட நான் செலுத்தும் மரியாதை, மட்டமாகவா இருக்கும் ?

அவர்கள் மரியாதை செலுத்தும்போது அகமகிழும் உங்களுக்கு, அரசியல் ஆவேசமும், ஆத்திரமும் ஏற்பட லாமா! மலர் தூவுகிறான் வெளி நாட்டான். அதைவிட நான் தூவும் மலர் எவ்விதத்தில் கெட்டதாகும் ? இந்தப் பொது அறிவு--அரசியல் விளக்கம் நம்மவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும். ஆனால், நாம் நினைப்பது போல, அவ்வளவு சுலபத்தில் இங்கே வந்துவிடாது. ஏனெனில், வருடத்துக்கு ஒரு தடவை நமக்குள் இன்னும் மன்மதன் எரிந்தானா? எரிய வில்லையா? என்கிற பிரச்னையே தீரவில்லையே! மன்மதனைக் கண்டவர்கள் யாரும் கிடையாது சண்டையோ, ஓயாமல் நடக்கிறது! இதைப்போல எத்தனை நாளைக்கு இருக்க முடியும்?