பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

எட்டு நாட்கள்


சென்றுவிடுகிறது--எங்கு சென்றாலும் முழக்கம் !! இந்தச் சிங்கத்தை, இந்த ப்ரூனோவை, இந்த அஞ்சா நெஞ்சினனை, 'மனமாறிவிட்டவனாக்கினால்' சில தலைமுறைகள் வரையிலே, அறிவுத்துறையிலே ஈடுபடவும் ஆட்கள் முன்வருவாரா? "அப்படிப்பட்ட அசகாய சூரன்! ஆண்டு பலவாக மார்க்கத்தை மதிக்க மறுத்து மனம்போன போக்கிலே புதுமை புதுமை என்று பொல்லாக் கருத்துக்களைப் பேசித் திரிந்தவன். என்ன ஆனான்? கடைசியில் கண்ணீர் பொழிந்தான், காலடி வீழ்ந்தான், கண்டுகொண்டேன் உண்மையை என்று இறைஞ்சினான் !"---என்று கூறிக்கொள்ளலாம் அல்லவா! பகுத்தறிவு கருவில் இருக்கும்போதே கருக்கிவிட இதைவிட வாய்ப்பு வேறு கிடைக்குமா! எனவேதான், ஜியார்டானோ ப்ரூனோவுக்கு மரண பயத்தைக் காட்டி, பணியவைக்கலாம் என்று ஆவல் கொண்டனர்.

எட்டு நாள் தவணை! ஒரு தனி மனிதனுடைய, ஒரு மாவீரனுடைய உயிர் இருப்பதா பறிக்கப்படுவதா என்பதல்ல முழுப் பிரச்சினை, உண்மையான பிரச்னை, பகுத்தறிவுக்கு இனியும் இடம் உண்டா அல்லது இந்த எட்டே நாட்களிலே, அது சுட்டுச் சாம்பலாக்கப்படுவதா என்பது தான். ப்ரூனோ இதை நன்கறிந்தே, என்னைச் சுட்டுச் சாம்பலாக்கட்டும்--அறிவு கொழுந்துவிட்டு எரிந்த வண்ணம் இருக்கட்டும் என்று கூறினான்--செயலால் !!

ப்ரூனோ, எப்போதும் தனக்காக அஞ்சினதில்லை--ஆண்டு பல கஷ்டப்பட்டதால் உள்ளத்தில் உரம் மெருகாகிவிட்ட இந்த நிலையில் மட்டுமல்ல. சிறுவனாக இருந்த போதே.

பதினைந்து வயதுச் சிறுவன் ப்ரூனோ, டாமினிக்கன் மடாலயத்திலே சேர்ந்தபோது: ஆர்வமும் நம்பிக்கையும்