பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

129


விரைவாகப் போய் வீழ்த்திவிட்டு வந்துவிட்டுமா ? கட்டளையிடும் கரங்களைக் கண்டதுண்டமாக்கி, கர்ஜனையிடும் வாயை இரண்டாகப் பிளந்து, உதைக்கும் காலை ஓராயிரம் துண்டு போட்டு, உழைக்காது மெருகேறி மினுமினுக்கும் அவன் 'சதைமலை மீது ஏறி கோரத் தாண்டவம் செய்யட்டுமா? இத்தனை நாள் என் இரத்தமெல்லாம் உறிஞ்சிக் கொழுத்தானே, அதை வட்டி போட்டு வாங்கி, நான் உழைத்து அலுத்த இப் பூமிக்கு அர்ப்பணம் செய்யட்டுமா?' என்று கேட்கிறாய்...வேண்டாமப்பா, வேண்டாம் ! வேதனைகளை எடுத்துக்காட்டி விளக்கியதும், வெடித்த எரிமலையாகி விட்டாயே! வெடித்த எரிமலை, விரைவில் தன் கோரச் சப்தம் இழந்து அடங்கிவிடுமாம், அது தெரியுமோ உனக்கு? உன் உணர்ச்சி அப்படியாகி விடக்கூடாது ! ஆத்திரம் அறிவை அழித்துவிடும் ! வேகம் விவேகப் பாதைக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும் ! கொதித்துஎழுந்து கொஞ்ச நேரத்துக்கெல்லாம் குந்திவிடுவது பெரிய காரியமல்ல; வெட்டி வீழ்த்தி ரத்தம் சிந்திவிட்டுப் போய்விடுவது பிரமாதமல்ல; உனது இந்தப் புது உணர்ச்சி புது வாழ்வு காணப் பயன்படவேண்டும் !

"உணர்ச்சியைக் கிண்டிவிட்டு உபதேசம் செய்யக் கிளம்பி விட்டாயா?" என்று என்னை இப்படி எரித்து விடுவதுபோலப் பார்க்கிறாயே! வேண்டாம் இவ்வளவு கோபம், வேதனைப்பட்டவனே ! அவசரத்துக்கு அடிமையாகாதே ! நான் உபதேசம் செய்ய வரவில்லை. உபதேசியாக 'உருத்திராட்சம்' உருட்டும் வீணன் நானல்ல என்பது தான் உனக்குத் தெரியுமே ! உன் வாழ்வு செம்மைப்பட வேண்டும் ! உயரப்பனும் ஓட்டப்பனும் ஒன்றாக வேண்டும் ! உன் உரிமைகளை நீ பெற்றுத் துன்பமற்று வாழவேண்டும் என்ற ஆசையினாலேதான் சொல்கிறேன் !


எ--9