பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

எட்டு நாட்கள்


ஆனால், சொந்த இலாபம், சுகபோகம், என்பவைகளில் துளியும் பற்றுக்கொள்ளாத துறவி அவர்!

"பாரிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவி உமக்கு அளிக்கப்பட இருக்கிறது. ஜியார்டானோ!" என்று கூறினார், அரசர் !

"இறையே! எனக்கா? இதற்குள்ளவா? நான் அத்தகுதி பெற்றவனா?" என்று, கேட்கிறார் ப்ரூனோ.

"பகட்டுடை அணிந்து, பசப்புகளிலே மனதைப்பறி கொடுத்து விடும், பாரிஸ் பட்டண வாலிபர்களையே, உமது பேருரைகளால் திருத்தவும், திரட்டவும் முடிகிறதே ! உம்மையன்றி வேறுயார், அந்தப்பதவிக்கு ஏற்றவர், பேராசிரியரே!" என்று கேட்கிறார் மன்னர்.

மடாலயத்தில். விசாரணைக் கொடுமையிலே சிக்கிக் கொள்ளாதிருக்க, ஆன்ஸ்லம் பாதிரியார் யோசனைப்படி, ப்ரூனோ. இரவில், பலகணி வழியாகக் கயிற்றின் துணை கொண்டு இறங்கி ஓடினார்--ஊரைவிட்டு -- இத்தாலியை விட்டு, சுவிட்சர்லாந்து நாடு கடந்து, இடையே பல இடங்களில் தங்கி, கடைசியாக பாரிஸ் வந்துசேர்ந்தார்.

பிரான்சிலே அரசோச்சி வந்த மூன்றாவது என்ரி என்பவர். பாரிஸ் பட்டணத்தில் தத்துவத்துறைச் சொற்பொழிவாளராகக் கீர்த்திபெற்ற, ப்ரூனோவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை ஆதரித்தார்; இரண்மனையில் இடம்தந்தார். அங்குதான் அவர் ப்ரூனோவுக்குச் செய்தி தருகிறார், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலைக்கு, அழைப்புக் கிடைத்திருப்பதாக.