பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி .என். அண்ணாதுரை

23


காக்குவதா ! குத்தட்டும், வெட்டட்டும், உயிர் இருக்குமட்டும், போராடுவேன், வாதாடுவேன். குன்றின் மேலிட்ட விளக்காக்குவேன் என் கொள்கையை; அதனை எடுத்துக் கூறிட வாய்ப்பு, எப்படிப்பட்ட சூழ்நிலையில் கிடைத்தாலும், பயன்படுத்திக்கொள்வேன். என்ற கருத்துடன் அவர் பணிபுரிந்து வந்தவர். எந்த வாய்ப்பையும் அவர் நழுவ விட்டதில்லை ; அதன் பலனாக என்ன விளைவு நேரிட்டாலும், தாங்கிக்கொள்ளத் தயங்கினதுமில்லை.

பிரன்ச்சு மன்னன், ப்ரூனோவின் மனப்போக்கைக் கேட்டுக் கோபித்துக்கொண்டான் ; வருந்தினான். வெறுத்து விடவில்லை. எப்படி வெறுக்கமுடியும் ! மன்னன், புன்னகைப் புலிகளையும் நயவஞ்சக நரிகளையும் காண்கிறான்! காவி அணிந்து திரியும் காமாந்தகாரர்களையும் அருட்கவி பாடி அக்ரமம் புரிவோரையும், பிறர் பொருள் கவரும் பேயரின் பூஜாமாடங்களையும் கண்டிருக்கிறான். மன்னன் கூறினாலும், என் மனதிலுள்ளதை மாற்றிக் கொள்ள மாட்டேன், மறைத்துவைத்து இச்சகம் பேசித் திரியவும் மாட்டேன், என்று தூய்மையான உள்ளத்துடன் இருந்த ப்ரூனோவிடம், வெறுப்பு அடைய முடியுமா ! அவர் சொல்லும் கொள்கை, மன்னனுக்கு உடன்பாடானது அல்லதான் -- சரியா தவறா என்று ஆராய்வது கூடத் தேவையில்லை என்று கருதினான்; ஆனால் மன்னனும் மண்டலமும் சீறும் என்று அறிந்தும், உண்மையைக் கூறிவிட்ட நேர்மையைப் பாராட்டாதிருக்க முடியுமா? ப்ரூனோ தன்னிடம் சொன்ன உண்மையை ஊர் அறிந்தால் ஆபத்து என்பது மன்னனுக்குத் தெரியும். மத அதிபர்களின் கோபத்தை எந்த மன்னனும் தாங்கிக்கொள்ள முடியாதல்லவா; மண்டலமே சீறும்; மாதாகோவில்களெல்லாம் சாபமிடும், ப்ருனோவின் கொள்கை தெரிந்துவிட்டால். மத அதிபர்-