பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை

29


செய்தால் விண்ணுலகு செல்லலாம்; பாவம் புரிவோர் நரகம் சேர்வர்; என்று முழக்கினர்.

பூமி உருண்டையாய் இருந்தால் என்ன, தட்டையாக இருந்தால் என்ன, சுற்றிவந்தாலென்ன சும்மாகிடந்தாலென்ன, என்று மத அதிபர்கள் எண்ணிக்கிடப்பதற்கில்லை; ஏனெனில், கோபர்னிகசின் கொள்கையை மக்கள் ஏற்றுக்கொண்டால், புனித ஏடுகளின் அடிப்படையே தகர்ந்துவிடுகிறது--பிறகு, அந்த ஏடுகளின் துணை கொண்டு கட்டப்பட்ட அமைப்பு என்ன கதியாவது -- அந்த அமைப்பின் பயனாகக் கிடைத்துள்ள கோலாகல வாழ்வு என்ன ஆவது—இது அவர்கள் கவலை, பயம்! எனவே, தங்கள் ஆதிக்கத்தை ஏவி, கோபர்னிகசின் கொள்கையை அழித்தொழிக்க முனைந்தனர். ப்ரூனோ, கோபர்னிகசின் கொள்கையைச் சரியானது என்று கற்றறிந்தார். சிந்தித்துத் தெளிவும் உறுதியும் பெற்றார். இந்த அடிப்படை மாற்றம் அவருக்கு ஏற்பட்டான பிறகு எந்த மத அமைப்புத்தான் அவரை ஆட்கொள்ள முடியும்!

கோபர்னிகஸ், ஆராய்ந்து அறிந்த புது உண்மைகூட, முழுவதும் புதிதல்ல. கிரேக்க நாட்டுப் பேரறிஞர் பிதாகோராஸ் என்பவர், இதனை முன்பேகூறி இருந்தார்: ஆனால் அரிஸ்டாடில் கொள்கை, அதனை இருட்டடிப்பில் வைத்து விட்டது. கோபர்னிகசின் கொள்கை, இதைப் புதுப்பித்தது; புயல் என்றனர் மதவாதிகள்--மத அடிப்படையில் கற்றவர் அனைவரும், இது கவைக்குதவாத கொள்கை என்றனர். ஆனால் கோபர்னிகஸ் வெற்றிபெற்ற வண்ணமிருந்தார். ப்ரூனோ, மடாலயத்தில் பயிலும்போதே இந்தக் கொள்கையை ஐயந்திரிபற உணர்ந்தார். ஆன்ஸ்லம் பாதிரியார் "மகனே! ஏன் இந்த கோபர்னிகசைக் கட்டி அழுகிறாய், அறியவேண்டியதை அரிஸ்டாடில் அளித்துவிட்டார்.