பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

35


காத்துக் கிடந்தனர். பகைமூண்ட இடங்களிலேயே ப்ரூனோ நீண்டகாலம் தங்கி இருந்திருந்தாலும் அவரை ஒழிக்க வழி கண்டிருப்பர்--ஆனால் அந்தப் புயல் ஓரிடத்தில் தங்கவில்லை. ஒரு நாட்டிலும் ஓய்ந்து இருக்கவில்லை.

இத்தாலி நாட்டுச் சீமான் ஒருவன் மோஷினிகோ எனும் பெயருடையான், ப்ரூனோவுக்கு ஒரு அழைப்புக் கடிதம் அனுப்பினான். என் மாளிகையில் வந்து தங்கி இருந்து, என் மகனுக்குத் தத்துவம் கற்றுத்தருக ! உமக்கு இங்கு எந்த ஆபத்தும் நேரிடா வண்ணம் நான் பாதுகாப்பளிக்கிறேன், என்று எழுதியிருந்தான். ப்ரூனோ களிப்படைந்தார். என் இத்தாலி அழைக்கிறது ! பசுமை நிரம்பிய தோட்டங்கள் என் கண்களுக்கு மீண்டும் விருந்தளிக்கும். என் தாயகத்தில் மீண்டும் உலவலாம். என் உள்ளத்தில் உள்ளதை என் நாட்டவருக்கு உரைத்திடலாம். நல்ல வாய்ப்பு ! ஈடில்லா இன்பம் ! என்றெல்லாம் எண்ணிக் களித்தார். ப்ரூனோவுக்குச் சதிகாரர்களின் இயல்பு தெரியாது. அவர் பண்பு அறிவார். படித்தவர்களின் பழக்க வழக்கமறிவார், சூது பேசும் சதிகாரர்களின் போக்கினை அறியார்.

இத்தாலியில், இனிமைதரும் திராட்சைமட்டுமா இருக்கிறது-- எரிமலையுமல்லவா இருக்கிறது ! வெசுவயஸ் மட்டுமல்ல, மத அதிபர் இருக்கிறார், எந்த நேரத்திலும் அவர் சாபம் எரிமலை கக்கும் நெருப்பைவிடக் கொடுமையாகக் கிளம்பக்கூடும். நாம் அங்கு செல்வது ஆபத்தாக முடியும், என்று எண்ணத்தான் செய்தார். ஆனால் அந்தச் சூதுக்காரன் அனுப்பிவைத்த கடிதம், அவரை ஏமாற்றிவிட்டது. இத்தாலிய நாட்டுச் சீமான்--அவனால் மத அதிபரின் பகையைக் கூட எதிர்த்து நிற்க இயலும்--அந்த மாளிகையைத் தாக்கத் துணிவு பிறக்காது, மத ஆதிக்கக்காரருக்கு என்று எண்ணினார்.