பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

எட்டு நாட்கள்


பளித்துவிட்டது. எட்டு நாட்கள் தவணை தருகிறோம். என்று தீர்ப்பளித்தோர் கூறிவிட்டனர்.

ஆண்டு அனுபவித்துவிட்டு, இனி ஆட அனுபவிக்க இயலாத நிலையில் உள்ள படுகிழமல்ல--உலகம் மாயை, வாழ்வே அநித்யம். இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடமில்லை என்று குளறும், வரட்டு வேதாந்தியுமல்ல; வாழ்வா? ஏன்? வாழ்ந்து நான் சாதிக்கவேண்டியது என்ன இருக்கிறது என்று பேசும் குழப்ப நிலையுடையோனுமல்ல, நடுத்தர வயதுடையவன்--உலகுக்கு உண்மையை அளித்தாகவேண்டும் என்ற ஆர்வம் கொழுந்துவிட்டெரியும் உள்ளம் படைத்தவன்--அவனைக் கட்டிவைத்துக் கொளுத்திச் சாகடிக்க உத்தரவு பிறப்பித்தனர்--அற மன்றத்தினர்-ஆம்! அறமற்ற செயல் புரியினும், அறமன்றமென்றே அது அழைக்கப்பட்டது.அறம் மட்டுமல்ல, அன்பு எனும் சீரிய பண்பினைத் தன் அகத்தே கொண்டது என்றும், அந்த மன்றம் கருதப்பட்டுவந்தது.

அறம் எது? அன்பு எது? என்று மக்களிடம் எடுத்துரைக்கும் உத்தமன் அவன்--அவனுக்குத்தான் மரணதண்டனை--எட்டே நாட்கள் தரப்பட்டுள்ளன, முடிவுக்கு வர.

எட்டு ஆண்டுகள் சிறையிலே சித்திரவதைக்கு ஆளாகி, வேதனையால் கொட்டப்பட்டு, தலைமயிர் வெளுத்துப்போய். கண்ணொளி மங்கி, கைகால் சோர்வுற்று, உடலெங்கும் வெதும்பக்கிடந்தான்--ப்ருனோ--இத்தாலி தந்த அறிவாளி !

ரோம் நகரச் சிறைக்கூடத்தில் தள்ளப்பட்டுக்கிடக்கும் அவன் முன், ஒரே பிரச்சினை நிற்கிறது. வாழ்வா, சாவா. என்று! அவன் வாழ்வது என்று முடிவு செய்துவிட்டான்--எனவே அவனை எட்டாம் நாள் சுட்டெரித்து விட்டனர்!!