பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

எட்டு நாட்கள்


திருத்தப்படமுடியாத நாத்தீகன்' என்று திருச்சபையினர் தீர்ப்பளித்து, இந்தப் பாவியின் இரத்தம் மண்ணில் விழாதபடி இவனைக் கொல்க ! என்று கட்டளையிட்டு, அதனை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை அறமன்றத்துக்கு அளித்தனராம்.

இரத்தம் கீழே சிந்தலாகாது என்றனராம் ! ஆறு ஆண்டுகள் அந்த வெனிஸ் நகரச் சிறையிலே இரத்தமும் சதையும் கலந்து கலந்து வெளிவந்தது-இப்போது இரத்தம் கீழே சிந்தலாகாது என்றனராம் ! என்ன பொருள் அதற்கு ? உயிரோடு கட்டிவைத்துக் கொளுத்து என்பதாகும்.

ஆண்டு பலவாக அவர்கள் படித்த மத ஏடுகள் ஏராளம் -- ஐயன் அருளும் உடையார் என்று கூறப்பட்டது--அவர்களால் ஒரு 'நாத்திக'னுடன் வாதிட்டு, அவன் கொள்கையை முறியடிக்க இயலவில்லை, உயிரோடு கொளுத்திவிடு என்றுதான் கூறமுடிந்தது. என்செய்வார்கள் அவர்கள் ! அவனுடைய அறிவு கிளப்பும் புரட்சித் தீ, மடாலயத்திலே குன்றெனக் குவித்துவைத்துள்ள மத ஏடுகளைச் சுட்டுப் பொசுக்குகிறதே ! தப்ப வழியில்லை, எனவே அவனைத் தீயிலே தள்ளு என்றனர்.

"நாத்திகன்--எனவே நாதன் இவனைத் தண்டிப்பார், நிச்சயமாக" என்று கூறிடக்கூட இவர்களுக்கு, நம்பிக்கை இல்லை ! ஒருவேளை, அவர்கள் ஆண்டவனின் தீர்ப்புக்கு இந்த வழக்கை விடலாகாது, ப்ரூனோ பக்கம் தீர்ப்புக் கிடைத்தாலும் கிடைத்துவிடும் என்று அஞ்சினர் போலும் ! ஆத்திகத்தைக் காத்திட அரண்மனைகளும் மாளிகைகளும் மட்டுமல்ல, சிறு குடில்கள் இலட்ச இலட்சமாக உள்ளன--இதனை ஒரு ப்ரூனோவின் கொள்கை என்ன செய்துவிட