பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

5

வாழ்வு! என்ன பொருள் அதற்கு ? உண்டு உலவி உறங்கி எழுந்து, மீண்டும் உண்டு உலவிடும் வேலையை ஒழுங்காகச் செய்யும் யந்திரமா மனிதன் ? ஆதிக்கக்காரன் அடிபணிந்து, ஆர்ப்பரிப்போன் பாதம்பற்றி குற்றேவல் செய்து கும்பியை நிரப்பிக்கொண்டு, கொத்தடிமையாகிக் குடும்பம் சமைத்துக்கொண்டிருப்பதா வாழ்வு? எத்தனிடம் சித்தத்தை ஒப்படைத்துவிட்டு ஏமாளியாகிக்கிடப்பதா வாழ்வு! அவன் அப்படி எண்ணவில்லை! வாழ்வு, ஒரு பெரும் பொறுப்பு, ஒரு அரும் வாய்ப்பு, உண்மையை அறிய, அறிந்ததன் வண்ணம் ஒழுக, பிறருக்கும் அந்த ஒழுக்கத்தை அளிக்க--அம்மட்டோ!--அந்த ஒழுக்கத்தை அழிக்கும் சழக்கருடன் போரிட்டு அறமல்லாததை, விரட்டி ஓட்டி அறத்தை நிலைநாட்டப் பாடுபடல்வேண்டும். வாழ்வு, அதற்கான ஒருவாய்ப்பு ! இந்தக் குறிக்கோளற்று இருப்பது, வாழ்வு அல்ல, என்று அவன் கருதினான். அவன் போல் ஒரு சிலரே எண்ணினர்--ஒரு சிலருக்கே அந்தச் சீரிய கருத்து இருக்க முடியும்--அந்த ஒரு சிலராலேயே உலகு மெள்ள மெள்ள மாண்பினைப் பெறுகிறது.

அவன் அறிந்து போற்றிய 'வாழ்வு' அவனுக்குக் கிடைத்துவிட்டது. கொடியோரால் அவன் சுட்டுக்கொளுத்தப்பட்டான்--இன்று வாழ்கிறான்--என்றும் வாழ்வான்! அவன். அப்படிப்பட்ட 'வாழ்வு' தேவை, என்று தீர்மானித்தான். எனவேதான், சாகச் சம்மதித்தான்.

"எட்டே நாட்கள்!" என்றனர்! உயிரை இழக்க எப்படி மனம் துணியும், ஒன்று, இரண்டு, மூன்று என்று நாள் ஓட ஓட அவன் நெஞ்சம் நெருப்பிலிட்டது போலாகும், அஞ்சுவான். கெஞ்சுவான். அலறுவான், அடிபணிவான், என்று தீர்ப்பளித்தோர் எண்ணிக்கொண்டனர்! அவர்-