பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

55


வென்றது ! பயங்கரமான போர் நடாத்தும் ஆற்றல் மிக்க ஹனிபால் என்பான், ரோம் நாட்டுத் தளபதியால் விரட்டப் பட்டான் ! கார்த்தேஜ் தரைமட்டமாக்கப்பட்டது, பெருஞ் செல்வம் கொள்ளைப் பொருளாகக் கிடைத்தது. ரோம் சாம்ராஜ்யக் கொடி கடலிலும் நிலத்திலும், கெம்பீரமாகப் பறந்தது. சிசிலியும், ஆப்பிரிக்காவும் ரோம் அரசுக்குக் கப்பம் செலுத்தின, தோற்ற காரணத்தால்.

உலகை வென்ற மாவீரன் என்று விருதுபெற்ற அலெக்சாண்டரின் அரசான மாசிடோனியாவை, ரோம் வென்றது ! கிரீஸ் தோற்றது !

வெற்றிமேல் வெற்றி ! எந்தத் திக்கிலும் வெற்றி ! ரோம், இந்த வெற்றிகளால் திரட்டிய செல்வம் ஏராளம். தோற்ற நாடுகளிலிருந்து ரோம், கைது செய்து கொண்டு வந்த அடிமைகளின் தொகை 100 இலட்சம் ! இவர்களை 'விலைக்கு' விற்று ரோம், பணம் திரட்டிற்று.

ஈடில்லை, எதிர்ப்பு இல்லை, என்ற நிலை பிறந்தது ! எந்தெந்த நாட்டிலே என்னென்ன போகப் பொருள் கிடைக்குமோ, அவைகள் எல்லாம், ரோம் நகரிலே கொண்டுவந்து குவிக்கப்பட்டன. முத்தாரங்கள், நவமணிகள் ஆகிய ஆபரணம் அணிந்து, பூந்துகில் உடுத்தி, புன்னகை காட்டிப் பூவையர் தம் காதலரின் தங்கப் பிடி போட்ட வாட்களை எடுத்து மூலையில் சாய்த்துவிட்டு, களத்தில் அவன் கொய்த தலைகளின் எண்ணிக்கை பற்றிக் கூறக் கேட்டு, தான் பூம்பொழிலில் கொய்த மலர்களின் அளவுபற்றிக் கூறிட, "அவ்வளவு மலரா ! கனியே ! மெத்தக் கஷ்டமாக இருந்திருக்குமே !" என்று வீரன் கூற "எல்லாம் தங்களைக் கண்டதும் பறந்ததே கண்ணாளா !" என்று அவள் கூற காதல் வாழ்வு நடாத்திய கனவான்கள் நிரம்பினர், ரோம் நாட்டில்.