பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

உடன்பிறந்தார் இருவர்


திட்டமிட்டுப் பணியாற்றினான், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு.

ரோம் நாட்டுச் சமுதாய அமைப்பு--பெட்ரேஷியன். பிளபியன் எனும் இரு பெரும் பிரிவு கொண்டதாக இருந்தது--முன்னவர் மேட்டுக் குடியினர், சீமான்கள், பரம்பரைப் பணக்காரர்கள்--இரண்டாமவர், ஏழைகள், ஏய்த்துப் பிழைக்கத் தெரியாதவர்கள். நாட்டின் முதுகெலும்பு போன்றார். டைபீரியசின் அன்பு நோக்கு இவர்பால் சென்றது.

பிளபியன் எனும் ஏழைகளைக் கொடுமை பல செய்து, பெட்ரீஷியன்கள் அடக்கி வைத்திருந்தனர். சகிக்கொணாத நிலைமை வந்தது. இந்த நாட்டிலே இருந்து இடியும் இழிவும் மிடிமையும் தாக்கத் தகர்ந்து போவதைக் காட்டிலும், இதைவிட்டே சென்று விடுவோம். வேற்றிடம் புகுந்து புது ஊரே காண்போம், உழைக்கத் தெரிகிறது, ஏன் இந்தப் பகட்டுடையினருக்குப் பாடுபட்டுத் தேய வேண்டும். நம் கரம் நமக்குப் போதும் என்று துணிந்து, பிளபியன் மக்கள் அனைவரும், ரோம் நகரை விட்டே கிளம்பினர். மூன்று கல் தொலைவில் உள்ள குன்று சென்றனர்! ரோம் நாட்டிலே உல்லாச வாழ்வினர் மட்டுமே உள்ளனர்--உழைப்பாளிகள் யாரும் இல்லை! வயல் இருக்கிறது, உழவன் இல்லை! சாலை சோலை இருக்கிறது. பாடுபடுபவன் இல்லை! மாளிகை இருக்கிறது, எடுபிடிகள் இல்லை! திடுக்கிட்டுப் போயினர், பெட்ரீஷியன்ஸ்.

இந்த வெற்றிகரமான வேலை நிறுத்தம் சீமான்களைக் கதிகலங்கச் செய்தது. ஏர் பிடித்தறியார்கள். தண்ணீர் இறைத்துப் பழக்கம் இல்லை. மாளிகை கலனானால் சரிந்து போக வேண்டியதுதான், செப்பனிடும் வேலை அறியார்கள். என் செய்வர்! தூது அனுப்பினர், தோழமை கோரினர்.