பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

61


பேச்சுக் கலையில் வல்லுநராயினர். வீர இளைஞர்கள், ரோம் நகரில் ஏராளம்---ஆனால் அந்த இருவர், வீரமும் ஈரமும் நிரம்பிய நெஞ்சினராக இருந்தனர். குடிப் பெருமையையும் நாட்டின் பெருமையையும் குறைவற நிலைநாட்ட வேண்டும் என்பதை அன்னை எடுத்துரைப்பார்கள்; இருவரும், அவை தமைக் குறிக்கோளாகக் கொண்டதுடன், அக்ரமத்தைக் கண்டால் கொதித்தெழும் அறப்போர் உள்ளமும் கொண்டவராயினர்.

"எஸ்கிபியோவின் மகள் என்றே என்னை அனைவரும் அழைக்கின்றனர்--கிரேக்கசுகளின் தாயார் என்று என்னை அழைக்கும் வண்ணம் சீரிய செயல் புரிவீர்" என்று தன் செல்வங்களுக்கு, கர்னீலியா கூறுவதுண்டாம். பெற்ற மனம் பெருமை கொள்ளும்படி, சிறுமதியாளரின் செருக்கை ஒழிக்கும் பெரும் போரில் ஈடுபட்டனர். இணையில்லா இரு சகோதரர். பெற்ற பொழுதும், குறுநடை நடந்த போதும், மழலை பேசிய போதும். பெற்ற மகிழ்ச்சியைவிட அதிகமான அளவு பெற முடிந்தது, தன் மக்கள், அறப்போர் வீரர்களாகத் திகழ்ந்த போது.

அறிவுக் கூர்மையும் மாண்பும் மிகுந்த கர்னீலியாவினிடம் பாடம் பெற்ற மைந்தர்கள், ரோம் நாட்டுச் சமுதாயத்திலே கிடந்த சீர்கேட்டினைக் களைய முனைந்தனர்--கடமையாற்றுகையில் இருவரும் இறந்துபட்டனர்--கொல்லப் பட்டனர் -- இறவாப் புகழ் பெற்றனர்.

டைபீரியஸ் கிரேக்கஸ், கெயஸ் கிரேக்கஸ்--இருவரும், சிறந்த பேச்சுத் திறன் பெற்றனர் -- அந்த அருங்கலையை ஏழைகளின் சார்பிலே பயன்படுத்தினர்.

டைபீரியஸ், உருக்கமாகப் பேசுபவன்--கெயஸ். எழுச்சியூட்டும் பேச்சாளன்.