பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

உடன்பிறந்தார் இருவர்


சின் செல்வாக்கு ஓங்கி வளர்வது கண்டு பெரிதும் பீதி அடையலாயிற்று. புதிய சட்டம் நிறைவேறிற்று. அதன்படி, ஒவ்வொரு பிரபுவிடமும் உள்ள நிலத்தை அளவெடுக்க முற்பட்டான் டைபீரியஸ். இதற்காகக் கூடாரம் அமைத்துக் கொள்ளும் செலவுத் தொகை கூட, தர மறுத்தது செனட்; அவ்வளவு அருவருப்பு. மற்றவர்கள் சர்க்கார் சார்பிலே, பொதுப் பணியாற்றக் கிளம்பும்போது படிச் செலவு, மிகத் தாராளமாகத் தரும், இதே செனட். ஆனால், ரோம் நாட்டுச் சமுதாய அமைப்பின் சீர்கேட்டை நீக்கி, சமன் உண்டாக்கி, வலிவடையச் செய்யும் நற்பணிபுரியும் டைபீரியசுக்கு படிச் செலவுகூடப் போதுமான அளவு தரமறுத்தது. அதுமட்டுமல்ல, அவனுக்கு எதிராகத் தப்புப் பிரசாரத்தைத் தீவிரமாக நடத்தலாயிற்று.

"மண்டைக்கர்வி மக்களை மயக்கி அடிமை கொள்கிறான்!"

"வீதியிலே பெரிய வெற்றி வீரன் போலல்லவா செல்கிறான்."

"ஏழைகளுக்காக உருகும் இவன் என்ன. வெட்டுகிறானா, குத்துகிறானா, வெய்யிலிலும் மழையிலும் நின்று வேலை செய்கிறானா? ஏழைகள் பெயரைக் கூறிக்கொண்டு ஏய்த்துப் பிழைக்கிறான்."

"மண்டிலங்களை வென்ற மாவீரர்களெல்லாம், தலை குனிந்து நடந்து செல்கிறார்கள்; இந்த 'மார்தட்டி' மக்கள் புடைசூழ அல்லவா செல்கிறான்."

"இரவுக் காலத்தில் பார்த்திருக்கிறீர்களா அவனை, வீடு செல்லும்போது மக்கள் தீவர்த்தி பிடித்துக்கொண்டு செல்கிறார்கள். அவ்வளவு ஒய்யாரம் கேட்கிறது அவனுக்கு"