பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

உடன்பிறந்தார் இருவர்


தங்கள் பாதுகாவலன் படுகொலை செய்யப்பட்டது கண்ட மக்கள், பதறினர்: கதறினர்; வேறென்ன செய்வர்? வெறிகொண்ட செல்வர் படை, துரத்தித் துரத்தித் தாக்குகிறது. எதிர்த்து நிற்கச்செய்யும் ஆற்றல்படைத்த தலைவன் இல்லை. செல்வர்களை எதிர்த்து நிற்கும் ஆற்றலை அளித்து வந்தவன் பிணமானான்; மக்களோ நடைப்பிணமாயினர். மாளிகைகளிலே மது அருந்தி மகிழ்ந்தனர்; ஏழைக் குடில்களிலே குலைநடுக்கம், கண்ணீர், முயற்சியை முறியடித்து விட்டோம் என்று வெற்றி பேசினர் வெறியர்; உத்தமனை இழந்துவிட்டோம் என்று விம்மிக் கிடந்தனர் எளியோர். டைபீரியஸ் கிரேக்கஸ் மறைந்தான்; படுகொலைக்கு ஆளானான். வயது 36 !

சோலை சுற்றியும், சொகுசுக்காரியின் மாலைக்கு அலைந்தும், வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் அவனை ஒத்தவயதினர் ரோம் நகரில். டைபீரியஸ், உழைத்து ஊராரின் நண்பனாகி உலுத்தரின் சதியால் பிணமாகி விட்டான்.

36-வயது! வீரத்துக்கும் ஆர்வத்துக்கும் இடமளிக்கும் பொருத்தம் அமைந்த வயதினன்! கீர்த்தி மிக்க குடும்பம்! தன் நிலையை உயர்த்திக்கொள்ள வாய்ப்புப் பெற்றவன். ஆனால், அவனோ, களம், செனட், காதல்கூடம் இவைகளிலே இன்பம் காணவில்லை; சந்தைச் சதுக்கத்திலே. ஏழையரிடமே இன்பம் கண்டான். அவர்களுடைய முகத்திலே படிந்துகிடக்கும் கவலையைத் துடைக்க வேண்டும். அதுவே சிறந்த குறிக்கோள், பெறற்கரிய வெற்றி என்று எண்ணினான்: சிறந்த பணியாற்றினான். தூங்கிக்கிடந்த மக்களைத் தட்டி எழுப்பினான்; பேச வைத்தான்: போரிட நெஞ்சுரம் தந்தான்; நேர்மையாளனாக வாழ்ந்தான்; வஞ்சகர்களால் வீழ்த்தப்பட்டான்.