பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

உடன்பிறந்தார் இருவர்


அருமைக் குமாரனைப் பறிகொடுத்த கர்னீலியாவின் மனவேதனை சொல்லுந்தரத்ததாகவா இருந்திருக்கும்? பார்த்துப் பார்த்து மகிழ்ந்துவந்த தாய் ! களம் சென்றான், கீர்த்திபெற்றான் ! மக்களிடம் மதிப்புப் பெற்றான். நாட்டுக் களங்கத்தைத் துடைக்கும் திட்டம் வகுத்தான். சமுதாயத்திலே புதிய திட்டம் புகுத்த அரும்பாடுபடுகிறான். ஊரெல்லாம் புகழ்கிறது: மக்கள், மண்டிலம் வென்ற மாவீரர்களைப் போற்றுவதைவிட அவனைப் போற்றுகிறார்கள், அவன் உரை கேட்டால் மகிழ்கிறார்கள், அவனைக் கண்டால் களிப்படைகிறார்கள். அவன் சொல்லைச் சட்டமெனக் கொள்கிறார்கள். 'காப்பாளர்' பதவியே, புதுமதிப்புப் பெறுகிறது மகனால் ! அப்படிப்பட்ட மகனை, மாபாவிகள் கொன்றுவிட்டார்கள். தாய் உள்ளம் எப்படித் தாங்கிக் கொள்ளும் ! எவ்வளவு பதைத்திருப்பார்கள் ! எவ்வளவு கதறி இருப்பார்கள்? பாவிகளே ! பாதகர்காள் ! என பாலகனை, பழி ஏதும் நினைத்தறியாதவனை, பிறருக்காக உழைத்து வந்தவனைக் கொன்றீர்களே ! நீங்கள் வாழும் நாடு வாழுமா ! என்றெல்லாம் சபித்திடத்தானே செய்வார்கள், துக்கத்தைத் துடைத்துக்கொள்ளவோ. சம்பவத்தை மறந்துவிடவோ, முடியுமா!

ஆனால் கர்னீலியா, தாங்கிக்கொண்டார்கள்! அறப்போர் நடாத்தினான் நமது அருமை மைந்தன்--அற்பர்களால் கொல்லப்பட்டான்--புறமுதுகு காட்டவில்லை சாவுக்கு அஞ்சி, கொள்கையை விடவில்லை--மாவீரனாகவே இறுதி வரை இருந்தான்--அவனைக் கொன்றவர்கள் அவன் பெற்ற புகழைக் கொல்லமுடியாது--அவன் வாழ்கிறான்--என் நினைவில்--ஏழையர் கண்ணீரில்--எளியோரின் பெருமூச்சில் -- வரலாற்றிலே அவன் சாகாப் பரம்பரை!--என்றெண்ணினார்கள்.