பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

83


நான் மகனை இழந்தேன் -- பெரும் வேதனைதான் -- ஆனால் நாடு ஒரு நன்மகனை இழந்துவிட்டது. நாடு வேதனையில் கிடக்கிறது, ஏழையர் உலகுக்குத் தன்னை அர்ப்பணித்துவிட்டான், என் மகன்--அவன் கொல்லப்பட்டது, எனக்குத்தரும் துக்கத்தைப் போலவே, ஒவ்வொரு ஏழையின் உள்ளத்துக்கும் தரும். அவன் என் மகனாகப் பிறந்தான், நாட்டவரின் மகனானான்! அவன் பொருட்டு துக்கிக்கும் உரிமை, எனக்கு மட்டுமல்ல, நாடு முழுவதுக்குமே வந்துவிட்டது ! எனவே, அவன் மறைந்ததால் நான் மட்டுமே வேதனை அடைகிறேன் என்று கூறுவதே தவறு ! நாட்டுக்கே வேதனை ! என் வேதனையைப் பெரிதெனக் கொள்ளல் கூடாது தாங்கிக்கொள்வேன் ! வேதனையைத் தாங்கிக்கொள்ளக்கூடத் தெரியாமல், டைபீரியசின் தாயார் இருக்கக் கூடாது ! நான், வீரனின் தாய் ! அந்த வீரன், உயிர் இழக்கவே அஞ்சவில்ல அவன் தாய் தான் நான் என்பதைக் காட்டவாகிலும், நான் கண்ணீரை அடக்கிக் கொள்ளவேண்டும் ! என் கண்ணீரைக் கண்டால், என் மகனைச் சாகடித்த செருக்குமிக்கோர், கேலியன்றோ செய்வர் ! பரிதாபம் காட்டுவர் சிலர். அது, கேலியைவிடக் கொடுமையன்றோ ! "பாபம் ! கர்னீலியா கதறுகிறாள். என்ன நேரிடும் என்பதறியாது குதித்தான். கூத்தாடினான் டைபீரியஸ், இறந்துபட்டான். இதோ அவன் தாயார் அழுதபடி இருக்கிறார்கள் ” என்று சுட்டிக்காட்டுவர். டைபீரியசுக்குத் துரோகம் செய்வதாகும் இந்த நிலை, "என் மகன் பெரும்பேறு அடைந்தான். பேதைகளே! நான் கண்ணீர் விடமாட்டேன்" என்றல்லவா, டைபீரியசின் தாயார் கூற வேண்டும். அப்போதல்லவா அக்ரமக்காரர்கள் அஞ்சிச் சாவர்! அவன் சாக அஞ்சவில்லை! என்று தெரிந்துகொள்ளட்டும், செல்வர்கள்.