பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப் பணி ஆற்றிடவும்; பொருளாதாரத் துறையில் வறுமையை வென்று; சமதர்ம அடிப்படையில் எல்லோரும் நல்வாழ்வு பெற வழிவகை கண்டிடவும்; பிறமொழி ஆதிக்கத்திற்கு இடங்கொடாமல் அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும், அவைகளுக்கான உரிய இடத்தைப் பெற்றுத் தரவும்; மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, மாநிலங்களில் சுயாட்சியும் – மத்தியில் கூட்டாட்சியும் (Autonomy for States and Federation at Centre) உருவாகிடவும் தொண்டாற்றுவது என்று திருத்தப்பட்டு; அதுவே இன்றைக்கும் நமது கழகத்தின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளாக அமைந்துள்ளன.

இந்தத் திருத்தம் தி.மு. கழகச் சட்டதிட்டத்தில் இடம்பெற; அண்ணா ஆற்றிய பொதுக்குழு உரை எவ்வாறு வழிகாட்டுதலாக அமைந்தது எனபதை அவரது கையெழுத்துப் பிரதி வாயிலாக ‘முரசொலி’ வெளியிடுவது; அனைவருக்கும் அரிய வாய்ப்பு.

கழகத்தின் கடந்த கால வரலாற்றையும் – நாம் கடந்து வந்த பாதையையும் – அந்தக் கரடுமுரடான பாதையில் நமது கரம் பிடித்து நமது அண்ணா அவர்கள் எப்படி நம்மை அழைத்து வந்துள்ளார் எனபதையும் உன் போன்றோர்க்கு விளக்கிடவே அண்ணா என் கையில் ஒப்படைத்துச் சென்ற அந்தக் கருவூலத்தை மே 3 முதல் வெளியிடுகிறேன்.

நாம் நடந்து வந்த பாதையை அறிந்துகொள்ள, அண்ணா வழியைப் புரிந்துகொள்ள; நமது குறிக்கோள், கோட்பாடு இவற்றில் தெளிவாக விளங்கி அவ்வாறே செயல்பட இது பயன்படும் என்று நம்புகிறேன்.

அன்புள்ள,

மு. க.

(1.5.2003)

குறிப்பு:–

அண்ணா எழுதித் தந்த உரையடங்கிய அந்த நோட்டுப் புத்தகத்தின் தலைப்பு; “எண்ணித் துணிக கருமம்” என்பதாகும். அதனால்தான் இத்தொடருக்கு அவர் கையெழுத்தையே தலைப்பாகச் சூட்டியுள்ளேன்.