பக்கம்:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நாணயம்

ஒரு வியாபாரிக்கு முதல் தேவை நாணயம். சொல் ஒன்று; எழுத்து நான்கு; பொருள் மூன்று.

1. நாணயம்—பணம்

ஒரு வியாபாரத்திற்குப் பொருள் முதலில் தேவை. அதற்கு மூலதனம் என்றும் பொருள். முதல் வைத்துத் தொழில் செய்பவன்தான் முதலாளி. கடன் வாங்கித் தொழில்செய்பவன் முதலாளியாகான். வேண்டுமானால் அவன் கடனாளி எனப் பெயர் வைத்துக் கொள்ளலாம். கடன் வாங்கி வியாபாரம் செய்கிறவன் வெற்றி பெற முடியாது. வியாபாரத்தில் வரும் இலாபம் அனைத்தையும் வட்டி தின்று விடும். “யானை அசைந்து தின்னும்; வட்டி அசையாமல் தின்னும்” என்பது ஒரு பழமொழி.

“காசுக்கு எட்டு சட்டி வாங்கி, சட்டி எட்டுக் காசிற்கு விற்றாலும் வட்டிக்குக் கட்டாது” என்பது மற்றொரு பழமொழி.

2. நாணயம்—சொன்னபடி, இருப்பதும், நடப்பதும்

முப்பது நாட்கள் கெடு என்றால் 28, 29ஆம் நாளில் கொடுப்பவன் நாணயமுள்ளவன். கெடு தாண்டினால் நாணயமும் போய்விடும்.

இந்த மூட்டை 50 கிலோ இருக்குமென்று சொன்னால், இந்தத் துணி 50 மீட்டர் இருக்குமென்று சொன்னால் சொன்னபடி இருக்க வேண்டும்; இருந்தால்தான் நாணயம். குறைந்தால் நாணயமும் போய்விடும்.