இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7 ..............................................எதைத் தேடுகிறாய்.?
உன்னுள் சுயநலம் சாக டித்து 'உதவும்'
உன்னைப் படைத்துவிடு!
தன்னை மறுத்து, மறப்பதுவே
தரணியில் பெரிய யாகமதாம்!
சுயநலம் உன்னில் அழிந்ததெனில்
அணையாய்ப் பொங்கும் உயிர்க்கருணை!
அயலார் வாழ்வில் சொர்க்கம் வரும்
அதுவேயுன் அகலம் அகலமடா!
எழுதும் இன்பக் கவிதைத் தொழிலோ
இயந்திரம் இயக்கும் பெரும்பணியோ
உழுதிடும் தொழிலோ எதுவாயினும்
உன்னை அவைகளில் மூழ்கவிடு!
ராகம் இழையும் இசைத் தொண்டோ
இராப்பகல் துாங்கா நீதியதோ
ஊகம் ஆத்மா உடல் அனைத்தும்
ஒன்றி அவற்றுடன் கரையவிடு.!
வசமாய், வலுவாய் என்றென்றாம்
வாழ்வின் வீதி நெடுகிலுமே
நிசமாய் இப்படி நீநடந்தால்
'நீளம்' அதுவேயுன் நீளமடா!