இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13 .......................................எதைத் தேடுகிறாய்..?
கவ்வும் சோகம் செத்தொழியக்
கண்ணீர் ஊற்றை மூடிவிட
அவ்வப்போது கோப்பைக்குள்
ஆத்மாவை மறையச் செய்கின்றேன்!
படையொடு வந்திடும் வேந்தர்களும்
பறித்திட முடியாதென் கோப்பைகளை!
மடையன் கடையன் என்றெல்லாம்
வைதிட முடியாதென் னையுமே.
மகுடம் சூடிய பேரரசும்
மண்ணின் புழுதிக்குச் சமமாகும்!
புகழும் பொன்னைப் பொக்கிஷத்தைப்
புல்லின் சருகாய் நான் மதிப்பேன்!
மின்னும் விழிகளால் விலைபேசும்
மேனி அழகால் வலைவீசும்
சின்னப் பெண்களின் சரஸமெல்லாம்
சேச்சே... எனக்குப் பிடிக்காது!
ஆடிப் பாடும் கேளிக்கை
அரட்டைச் சிரிப்பு, கும்மாளம்
மூடிய என்றன் கதவுகளை
முட்டித் திறக்க முடியாதோ?