இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்................................................. 1. கரும்புப் பழம்
கரும்புக்குப் பழம்வைக்கக்
கடவுளவன் ஏன்மறந்தான்?
அரும்புக்கும் மணம்கொடுக்க
அவ்விறைவன் தவறியதேன்?
கற்றெதெதும் விளக்கவில்லை!
காண்பதெதும்உரைக்கவில்லை!
நெற்றியதில் பலசுருக்கம்!
நினைவலைக்குள் வேதாந்தம்!
இரும்புச் சதைகளையே
இதயமதாய்ப் பெற்றவர்கள்
திரும்பும் திசையெல்லாம்
செல்வர்களாய் வாழ்வதுமேன்?
ஏழெட்டுப் பட்டங்கள்
இடுப்பொடியச் சுமப்பவர்கள்,
வாழவைக்கும் கல்வியதில்
வட்டச்சுழி பெறுவதுமேன்?