இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17..................................எதைத் தேடுகிறாய்?
தனிமனிதக் கோணல்கள் சமுதாயக் கோரங்களாய் சுனைமூடும் பாறைகளாய்ச் சுகவாழ்வைக் கெடுப்பதுமேன்?
நெஞ்செல்லாம் கஞ்சாவாய் நினைவழிந்த வாலிபங்கள்! நஞ்செல்லாம் நெஞ்சாக நடமாடும் அரசியல்கள்!
குள்ளம் குட்டையெல்லாம் கோபுரமாய்ப் பாவலாக்கள்! உள்ளங்கள் அனைத்திலுமே ஊமைப்புண் காயங்கள்!
அம்புலிக்குள் நுழைந்தாலும் ஆதவனைப் பிடித்தாலும் வெம்புலியாய் உறுமுகின்ற வெறிமனிதம் சாகவில்லை!
கற்புக்கும் நோய்நொடிகள்! கண்பொசுக்கும் ஆபாசம்! கற்பனையில் புகைமூட்டம்! கலையுலகே பாலைமணல்!