பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19 ......................... எதைத் தேடுகிறாய்.

நாயகியாம் என்செல்வி
 நாவெல்லாம் தமிழ்த்தேனாய்ப்
 பாயிரத்து 'மலர்மிசை'யைப்
 பைரவியில் இசைத்திட்டாள்!

 அடுத்தகணம் நான்விழித்தேன்
 அற்புதத்தைக் கண்டுவிட்டேன்!
 படுத்துவிட்ட மானுடமும்
 பலம் பெற்றே எழுந்துவிடும்,

 ஆயிரத்துச் சொச்சமுள
 அருஞ்சுளைகள் கொண்டதொரு
 காயகல்பக் கனிக்குள்ளே
 கண்டுவிட்டேன் அருமருந்தை!

 பொருள்கலவை மருந்தாகப்
 புகழ்வடிவோ நூலாக
 அருள்ததும்பும் ஞானரச
 ஆனந்தப் பழமிதுதான்!

 ஞாலத்தின் பிணிபசியை
 நனியகற்றும் பழமிதுதான்!
 காலமெல்லாம் அழுகாதக்
 கடவுட்பழம் 'குறளே’தான்!

 கரும்புக்கும் பழம்வைக்கக்
 கடவுள்தான் மறக்கவில்லை!
 அரும்புக்கும் மணம்கொடுக்க
 அவ்விறைவன் தவறிவில்லை!