பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



29 .......................எதைத் தேடுகிறாய்..?

கருணையோ டியற்கை அன்னைக்
காசினி வேட்கை தீரத்
தருகின்ற அமுதே உன்றன்
தகுவிளநீ ராகும்! அதைப்போய்
மருள்போதைக் கள்ளாம் நஞ்சாய்
மாற்றுமோர் கொடுமை கண்டே
வருகின்றப் புயலைத் தின்றே
வாழ்வையே தொலைக்கின்றாயோ ?

சிந்தையைக் காமம் கிள்ளச்
சிறுபுத்திப் புலவன் யாரோ
அந்தமாம் பாவை மார்பின்
அழகுக்கே உவமை காட்ட
வந்தவன், செவ்விள நீரை
வருணித்தக் குறும்பைக் கண்டோ
நொந்துநீ இவ்வி டத்தில்
நெளிகின்றாய்; கோணு கின்றாய்!

தன்னினத்தார் சிலர்பா லுள்ளத்
தகாத செயல்க ளுக்காய்
உன்மேனி முதுகில் முள்ளை
ஓட்டுகின்றார் சிலர்தாம்! அடடா!
என்னதான் உன்றன் பொறுமை!
இப்படிச் செய்த போதும்
சின்னதோர் முனகல் கூடச்
செய்வதில்லை! நீயே தொண்டன்!