பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ.சண்முகம்................................... 32


வருகவே!

பழமை யாவும் விலகவும்
பகைமை யாவும் தொலையவும்
செழுமை யாவும் மலரவே
சீலம் ஐந்துமே - புதுத்
தேதியாய் இவண் வருகவே!

உண்மை யாவும் முழங்கவும்
உரிமை யாவும் புழங்கவும்
வண்மை யாவும் வழங்கவே
வாய்மை என்பதே - புது
வருடமாய் இவண் வருகவே!

வையம் யாவும் தழைக்கவும்
வாழ்வு யாவும் பிழைக்கவும்
ஐயம் யாவும் அழிக்கவே
அன்பென்னும் ஒன்றே - புது
ஆண்டென இவண் வருகவே!

பொய்மை யாவும் நீங்கவும்
பூடு யாவும் ஓங்கவும்
தாய்மை யாவும் தாங்கவே
தர்மம் என்பதே - புதுத்
தவமதாய் இவண் வருகவே!