இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
39................................எதைத் தேடுகிறாய்.?
தாயே வருகிறேன்!
இமயம் - குமரி இடைப்பட் டிலங்கும்
இனியநல் பாரத அன்னையே!வணக்கம்!
இமிழ்கடல் மூன்றைப் பட்டாள மாக
எய்திய தேவி! வணக்கம் வணக்கம்!!
எத்தனை எத்தனை இடர்கள் கடந்தனை!
எத்தகு எத்தகு இருள்கள் கழுவினை!
எத்தனை ஆயிரம், தத்துவம் தந்தனை!
எழில்உமிழ் தீபமே வேத வித்தகீ!
மானுடம் தழைக்க மகத்துவம் பெய்த
“மகாத்மா” வென்னும் அருளின் கொழுந்தை;
வானகப் பிள்ளையை ஈன்ற பேறால்
வற்றாப் புகழினைப் பெற்றனை அன்றோ?
வர்க்கப் பிளவுகள்; வர்ணப் பிரிவுகள்;
வளத்தால்,வறுமையால் வந்த வரப்புகள்;
தர்க்கப் பிணக்குகள் எல்லாம் கரைந்தே
சங்கமம் ஆகும் சமரசக் கடல்நீ!