பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41 .......................................... எதைத் தேடுகிறாய்.?

ராணுவ நிழல்கள் தற்காப் பென்பதை
 ரகசிய மற்ற முரசாய் ஒலித்தனை!
 பேணுதல் அகிம்சைப் பேரரருள் ஒன்றால்
 பிரபஞ்ச முனைகள் அனைத்தும் பிணைத்தனை!


பூகோளப் பெளதிக எல்லைகள் எல்லாம்
 பொல்லாப் போலிக் கோடென மதித்தனை!
'ஏக வையப் பொதுமை வாழ்வே'
 இன்றும், இனியும் உன்றன் கோஷம்!


அணுவின் திரள்களில் நஞ்சை அகற்றி
 அமிழ்தம் கொணரவே நீ முயல் கின்றாய்!
 துணிவும் நேர்மையும் கவசங்களாகும்,
 துலைக்கோல் நெஞ்சால் நிமர்ந்தனை நீயே!


உலக வீதிகள் அனைத்திலும் அலைந்தேன்!
 உயிரைச் சுமக்கும் பிரேதம் ஆனேன்!
 கலகம், குழப்பம், மடமை இவையே
 கண்களில் படிந்த காட்சி அழுக்குகள்!


'இன்பம்', 'அமைதி இரண்டையும் தேடி
 ஈன நாற்ற இருளில் புரண்டேன்!
 அன்பை; பண்பை; அடக்கம் தன்னை
 அறிவீன மாகக் கருதியே சிதைந்தேன்!