45...............................எதைத் தேடுகிறாய்..?
எத்தனையோ தொல்லைகளைத் தாங்கிக் கொண்டே
இதயத்தை இரும்பாக்கி எல்லை ஓரம்
கொத்தவரும் சாவதற்கும் வாழ்த்துக் கூறிக்
குண்டுபட்டுக் குருதிசொட்டத் தாயின் மண்ணை
முத்தமிட்டே காத்து நிற்கும் வீரர் தம்மை
மூலவராய்க் காட்டுகின்ற கதைகளையே
சித்தரித்தால் சினிமாதான வென்றிடாதா?
தேசத்தின் விழிப்புக்கே உதவி டாதா?
தடுத்திருக்கும் நான்குசுவர்க் குள்ளே நிகழும்
சம்பந்தி சண்டைகளை ரசிப்பதற்கோ;
படுத்திருக்கும்'கும்' அழகி ஷிப்பான் நழுவப்
பாடுகின்ற 'ஸோலோ' வைக் கேட்பதற்கோ
எடுத்தணைத்துக் காதலியைக் கசரத் தாக்கும்
ஈனத்தைக் காண்பதற்கோ இதுவா நேரம்?
அடுத்தடுத்துப் பகைறுமல் கேட்கும் போதும்
'அட்டைப்புலி சண்டை' களைக் காட்டலாமா ?
தர்மத்தின் தீபத்தை அணைப் பதற்கும்
சத்தியத்தின் வீணையதை முறிப்ப தற்கும்,
வர்மத்தை, வஞ்சகத்தைப் பண்ணை வைத்தே
வளர்க்கின்ற பேயர்கள் சூழும் நேரம்...
மர்மக்குகை, முகமூடிக் கூட்டந் தன்னை
'மாஸ்டர்’ எனும் சொறிநாயால் கண்டுபிடிக்கும்
கர்மத்தைக் கதையாகக் காட்ட வந்தால் -
கருத்துள்ளோர் சிரிப்பார்கள் - வாயால் அல்ல!