இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை
‘எங்கிருந்துவந்தோம்? எங்கேசெல்கிறோம்? இடைப்பட்ட வாழ்வுப் பயணத்தில் மனிதகுலத்தில் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகள்? ஒருபொழுது புன்னகைப் பூத்துக் குலுங்கும் கன்னப் பரப்பில் மறுபொழுது கண்ணீர்ப்பூக்கள் மலர்வதும் ஏனோ?
இன்றைய பொழுது யாருக்காக? நேற்று நிம்மதியாக இருந்தவன் இன்று நிம்மதி இழப்பான் நேற்று நிம்மதி இழந்தவன் இன்று நிம்மதி அடைவான் இறைவனின் நியதிக்கு யார் தான் தப்பமுடியும்? என்பார் கவியரசு கண்ணதாசன்.
கடலுக்குக் கீழே என்ன? வானுக்கு மேலே என்னென்ன?அறிவியலின் எல்லைக்கு அப்பால் ஏதோ இருக்கிறதே... அதுதான் கடவுளா?
கடவுள் என்பது உருவமுள்ளதா? தனிமை மட்டுமே கொண்டதா? அன்பும் அறனுமே கடவுளின் வடிவம் என்கிறது தமிழ் வேதங்கள்...தியானத்திலும் தவத்திலும் கடவுளை நேரடியாய் அடையலாம் என்கின்றனர் ஆன்மஞானியர்.
இந்தத் தேடலுக்கு எல்லை இல்லை இத்தகைய ஆன்ம வாழ்வின் கேள்விகள் குறித்த எளிய விளக்கங்களாக இக்கவிதைத் தொகுப்பு நெஞ்சுக்கு நிம்மதி அளிக்கிறது! வாசித்துப் பாருங்களேன்...- பதிப்பகத்தார்