பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எனது கதைகளின் கதைகள்

113

றது. பின்னர் இது “பாசம் ஒரு வேசம்” என்ற தலைப்பில் திரைப்படமானது. ஆனால் எடுக்கத் தகுதியில்லாதவர்கள் எடுத்ததால், அது பார்க்கத் தகுதியில்லாமலேயே போய்விட்டது.

மானுடத்தின் நாணயங்கள்

பெண்ணைப் பற்றி எழுதிய எனக்குப் பிடித்த ஒரு சிறுகதை, ‘மானுடத்தின் நாணயங்கள்! என் மனைவி வழி சொந்தக்காரப் பெண் ஒருத்தி, கிராமத்திலிருந்து கணவனுடன் எண்ணூரில் வசித்து வந்தாள். அவள் கணவன், இன்னொருத்தியைச் சேர்த்துக் கொண்டு, அவளைக் கொடுமைப்படுத்துவதாகத் தகவல் வந்தது. எப்படியாவது அந்தப் பெண்ணை மீட்டு அவளுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்று சொந்தக்காரர்கள், என்னைக் கேட்டுக் கொண்டார்கள். பப்ளிசிட்டி ஆபீசராக, சற்று போலீஸ் செல்வாக்கில் உள்ள நான், அந்தப் பெண்ணின் சித்தப்பாவுடன் எண்ணூருக்குப் போனேன். அங்கிருந்த டிஎஸ்பி என்னுடைய நண்பர். “ஐயோ இதெல்லாம் பொம்பள விவகாரங்க. போலிஸ்காரனை கிழிச்சிப்பிடுவாங்க” என்றார் அவர். உடனே ஒரு கான்ஸ்டபிள் டமார் என்று சல்யூட் அடித்து, தான் இந்த விவகாரத்தை முடித்து வைப்பதாகக் குறிப்பிட்டார். டிஎஸ்பி நண்பர் வேண்டாவெறுப்பாகச் சம்மதித்தபோது, (பின்னால் அந்தக் கான்ஸ்டேபிளுக்கு, சம்மன் இல்லாமல் ஆஜரானதற்காக டோஸ் கிடைத்திருக்கலாம்) அந்தக் கான்ஸ்டேபிளுடன், இன்னும் நான்கைந்து போலீஸ்காரர்களுடன் என் சொந்தக்காரப் பெண் வீட்டிற்குப் போனோம். அவள் தலை மொட்டையடிக்கப்பட்டு, கூனிக்குறுகி இருந்தாள்.