பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

சு. சமுத்திரம் ☐

அவளின் தாலி கட்டாத சக்களத்தி, இரண்டு குழந்தைகளோடு கும்மென்று இருந்தாள். கான்ஸ்டேபிள் எடுத்த எடுப்பிலேயே அந்தக் காதல் மன்னனை நாயே பேயே என்று பேசினார். அடிக்கக்கூட போய் விட்டார். அதற்குள் அவன், அவர் காலிலும் என் காலிலும் விழுந்து, என்ன சொன்னாலும் கட்டுப்படுவதாக வாக்களித்தான். என்னுடன் வந்த பெண்ணின் சித்தப்பாவும் அந்த கான்ஸ்டேபிளும், அவன் வைப்பாட்டியை அப்போதே துரத்திவிட வேண்டும் என்று மிரட்டினார்கள். அவனும் போலிஸைப் பகைத்து அந்த ஏரியாவில் வாழ முடியாது என்பதால், அதற்கு உடன்பட்டான். ஆனால் எனக்கோ மனசு கேட்கவில்லை. நான் இதை என் சொந்தக்காரப் பெண் ஒருத்தியின் பிரச்னையாக அனுகாமல், ஒரு பெண்ணின் பிரச்னையாக அணுகியதால், எனக்கு அவனது வைப்பாட்டி பிரச்னையும் மனதை நெருடியது. இவனால் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக்கப்பட்ட அவள், எங்கே போவாள்? என்ன செய்வாள்? என் சொந்தக்காரப் பெண்ணும் அவளும் பிரச்னையைப் பொறுத்த அளவில் இடம் மாறுகிறார்களே தவிர, பிரச்னை தீர்ந்தபாடில்லை. நான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, அவள் இரண்டு பெண்களோடும் வாழட்டும்; இருவரில் எவளையாவது கொடுமை செய்தால், போலீஸ் அவனை உதைக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன். இதனால் என் சொந்தக்காரப் பெண்ணுக்கும் அவள் சித்தப்பாவிற்கும் என்மேல் வருத்தம் தான். ஆனால் என் முடிவு எனக்கு இன்னும் சரியானதாகவே தெரிகிறது. இந்த அடிப்படையில், ‘மானுடத்தின் நாணயங்கள்’ என்று, ஒரு சிறுகதை எழுதினேன்.