பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எனது கதைகளின் கதைகள்

119

டியே, என்னைக் கோபமாகப் பார்த்தார்கள். அவள் தற்செயலாக மேலும் கீழும் தலையை ஆட்டியிருந்தால் கூட போதும், நான் அப்பளமாகியிருப்பேன். ஆனால் அவள் நானில்லை என்று தலையாட்டிவிட்டாள். உடனே ஒரு சின்ன கற்பனை ஏற்பட்டது. இப்படி வாலாட்டியவனை அவள் கண்டு கொண்டாலும், அண்ணன் தம்பிகளிடம் சொல்லி அவனை அடித்துத் துன்புறுத்த அவள் தாய்மை இடம் கொடுக்கவில்லை; ஆகையால் தப்புச் செய்தவனையே சம்பந்தப்படாதவன் போல் சொல்லுகிறாள் என்னும் வகையில் எழுதினேன். இப்படி மட்டும் கதையை முடித்தால் அவள் ஏதோ அந்தப் பயலின் கண்ணசைவில் ரசனை கண்டவள்போல் ஆகிவிடும். ஆகையால் யாருக்கும் தெரியாதபடி, அந்தப் பயலுக்கு மட்டும் தெரியும்படி, அவனைக் காப்பாற்றி விட்டு, காறித்துப்பியபடியே நடந்தாள் என்று கதையை முடித்தேன். ஒரு நிகழ்ச்சியை, உள்ளது உள்ளபடிச் சொல்லல் நடப்பியல், அதையே நடப்பியலுக்குப் புறம்பாகாதபடி நடக்கும் வகையில் சமூகத்திற்குப் பயன்படும் வகையில், மனிதனை மேன்மைப்படுத்தும் வகையில் முடிப்பது யதார்த்தம். சென்னை வானொலி நிலையத்தில் ‘தாய்மை’ என்ற தலைப்பில் ஒலிபரப்பாயிற்று.

பதிலடி

நான் இருக்கும் திருவான்மியூருக்கருகே என் வீட்டுப் பக்கமாக ஒரு குடிசை. அங்கே ஒரு குடிகாரக் கணவன். அவன் மனைவி பிள்ளை குட்டிகளோடு இருந்தான். இருவருமே இளம் வயதினர். புருஷன் குடிகாரன். வேலைக்கு வேறு போக மாட்டான். இவள்