பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

சு. சமுத்திரம் ☐

டுக்கு புல் வெட்டியது மாதிரியும் ஆயிற்று என்பது போல், அங்கே படிக்கும் என் மகனை கடமையாற்றும் சாக்கில் பார்க்கப்போகிற மகிழ்ச்சியில் போனேன். இந்த மகிழ்ச்சியில், அதற்கு முன்பு மூன்று நாட்களாகச் சாப்பிடுவதில் ஒரு ஈடுபாடு இல்லாமல் போனதை உதாசீனம் செய்துவிட்டேன். பல்கலைக்கழகத்திலும் இரண்டு நாட்கள் இருந்தேன். உடம்பு ஒரு மாதிரி தோன்றியது. அந்த இரண்டு நாட்களிலும் காபி, பன் தவிர எதையும் சாப்பிடவில்லை. அதைப்பற்றி அலட்டிக்கவும் இல்லை. அங்கிருந்து மதுரை பாத்திமா மகளிர் கல்லூரிக்குச் சென்று, கண்ணகி கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றியதாகக் கூறப்படும் பேச்சு வழக்கு, கல் கொண்டு வந்த செங்குட்டுவன், ஆகிய அபத்தங்களால் தமிழகம் மக்காகியிருப்பதை மாணவிகளுக்கு எடுத்துரைத்தபோது, அவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. பேராசிரியை சக்திபெருமாள் அவர்கள், கொடுத்த விருந்திலும் சாப்பிடவில்லை. வழக்கம்போல் இதையும் பொருட்படுத்தாமல், வானொலி நிலையத்திற்கு என் நண்பர்களைப் பார்க்கப்போகும் போது, மேகநாதன் என்ற நண்பரிடம் எதேச்சையாக என் பிரச்னையைச் சொன்னேன். உடனடியாக அவர், தனது மைத்துனரான வயிற்று நோய் நிபுணரிடம் கூட்டிச் சென்றார். அங்கே ரத்தத் துளிகளோடு வாந்தி எடுத்தேன். அந்த நிபுணர், எனக்கு மஞ்சக்காமாலை வந்திருக்கிறது என்றும், இதற்குமேலும் தாமதித்தால் சிறுநீரகம் கெட்டுவிடும் என்றும் - ஒருவேளை இப்போதே கெட்டிருக்கலாம் என்றும் சொன்னதுடன், என்னை ஒரு நர்சிங்ஹோமில் சேர்த்துவிட்டார்.