பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

சு. சமுத்திரம் ☐

சம்பளத்தை நான் உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று ஆணையிட்டார்கள். எனக்கோ இது அதிகப்படியாகத் தெரிந்தது. அந்த ஆசாமிக்கு சம்பளத்தை நான் கொடுத்து விட்டேன் என்றால், பிறகு கர்நாடக மாநிலம் முழுதிலும் உள்ள, எங்கள் துறையின் ஊழியர்கள் என்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்த்து தந்திகள் அடிக்கலாம். ஆகையால், நான் துணிந்து தந்தி அடித்தவரை சஸ்பென்ட் செய்தேன். மேல் அதிகாரிகளிடம், என் அனுமதியின்றி தந்தி, அடித்ததை அதற்குக் காரணமாகக் காட்டினேன். தில்லி அதிகாரிகளுக்கு என்மீது கோபம் என்றாலும் - எனது சஸ்பென்ஷன் உத்திரவை அவர்கள் ரத்துச்செய்யலாம் என்றாலும், அவர்களுக்கு எதையும் எழுத்தில் கொடுக்க பயம்; பேசாமல் இருந்துவிட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தில்தான் ஒரு பயங்கரமான உண்மை எனக்குப் புரிந்தது. அதாவது இந்த அரசாங்கத்தில் ஒரு கழுதையைக் கூட வேலையில் சேர்த்துவிட முடியும். ஆனால் அந்தக்கழுதையை நீக்குவது என்பது முடியாத காரியம். இந்த ஆசாமியை சஸ்பெண்டு செய்து விட்டு நான் ஏதோ சஸ்பெண்டு ஆனதைப் போல அலைந்தேன். அரசாங்க உத்தரவுகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய என்னுடைய நிர்வாக அதிகாரியோ, நான் சொல்வதற்கெல்லாம் “எஸ் ஸார்” போடமாட்டார். ஏனென்றால், எடுத்த எடுப்பிலேயே “எஸ்” என்கிற வார்த்தை மரியாதைக்குறைவானது என்பது அவருடைய கருத்து. ஆகையால் “ஸார் எஸ்” என்றுதான் சொல்வார். நீட்டின இடத்தில் கையெழுத்தைப் போடுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாத மனிதர். சஸ்பெண்டு செய்யப்பட்ட ஆசாமிக்கோ