பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

சு. சமுத்திரம் ☐

செம்மையாக உள்ளன. பெருக்குகிறவர்களுக்குக் கூட இரண்டாயிரம் ரூபாய் வரை சம்பளம். ஆனாலும், இந்த டவுன்ஷிப் தெருக்களைச் சுத்தப்படுத்துவது, பூங்காக்களைப் பராமரிப்பது, விருந்தினர் விடுதியை சுத்தப்படுத்துவது போன்ற களப்பணிகளை கான்ட்ராக்டர்களே ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து அவர்களுக்கு ஐந்தோ, பத்தோ கொடுத்து சுத்தம் என்ற பெயரிலே சுரண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். அமைப்பு ரீதியில் இல்லாத இந்த அப்பாவி தொழிலாளர்கள், இந்த திட்டப் பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால், ஒரு பொந்துப் பகுதியில் கோலோச்சுவதாகக் கேள்விப்பட்டேன். பி.ஆர்.ஒ., இந்த இடம் கள்ளச்சாராயத்திற்கு பேர் போனது என்றும், நான் போவது நல்லதில்லை என்றும் குறிப்பிட்டார். அவரை ஒதுக்கிவிட்டு, எனது திரைப்படப் பிரிவுடன் அந்தப் பகுதிக்குப் போனேன். அங்கிருந்த மக்கள் கிட்டத்தட்ட மலைப் பொந்துகளிலேயே இருந்தார்கள். நான்கு குச்சிகளை நிறுத்தி அவற்றை கோணிகளால் மூடி, வீடு கட்டியிருந்தார்கள். கொசுக்கள் குருவிகள் போல் வட்டமடித்தன. சதசத என்ற தரைப்பகுதி. சுமார் ஐநூறு தொழிலாளர்கள் இருப்பார்கள். தமிழ்க்காரி, இந்திக்காரரை கல்யாணம் செய்திருந்தாள். மலையாளத்தாளுக்கு கூர்க்கா கணவன். தெலுங்குப் பெண்ணுக்குப் புருஷன் தமிழன். இப்படி ஜாதி தொழில் பேதமின்றி தாம்பத்தியம் வைத்திருந்த அந்தத் தொழிலாளர்கள் ஒரு சின்ன இந்தியா போல் காட்சியளித்தார்கள். இவர்கள் என்னைப் பார்த்ததும் மெய்சிலிர்த்துப் போனார்கள். இப்படி ஒருவர் தங்களைத் தேடி வந்ததில்லை என்பதே அதற்குக் காரணம்.