பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

99

லுள்ள எல்லம்மா கோவிலில் நடைபெறும். புராணத்தில் வரும் ஜமாதக்னி முனிவரின் மனைவி, ஒரு கந்தர்வனை அதிசயமாகப் பார்த்து கற்பு கெட்டுப் போனதாகக் கருதப்பட்டுத் தந்தையின் ஆணைப்படி மகன் பரசுராமனால் கொலை செய்யப்பட்டவள்... ஆனாலும் புத்துயிர் பெற்று பெல்காமிற்கும், தார்வார் நகரங்களுக்கிடையே சுடுகாட்டுப் பகுதி போன்ற இடத்தில் எல்லம்மாவாக விளங்குகிறவள். இந்தக் கோவிலில் இன்றும் இளம் பெண்கள் பலவந்தமாக கொண்டு வரப்பட்டு தேவதாசிகளாக ஆக்கப்படுகிறார்கள். இது சட்டவிரோதம் என்றாலும் அதிகாரிகள் மாமூலாக நடந்து கொள்வார்கள். நான் பெல்காமிற்குப் போகும் வழியில் இந்த கோவிலுக்குப் போனேன். அங்கே முடியெல்லாம் சடையாக, உடம்பெல்லாம் வியாதியாக பிச்சையெடுத்துக் கொண்டிருந்த வயதான தேவதாசிகளையும், பலியாடாக நிறுத்தப்பட்டிருந்த அப்பாவி பெண்களையும் கண்டு, இப்போதுகூட மனதிற்குள் அடிக்கடி அழுகிறேன். என் துறையின் சார்பில் இவர்களுக்காக நான் ஒரு இயக்கமே நடத்தினாலும் அது பலித்ததா என்பது சந்தேகமே. இங்குள்ள பூசாரிகள் அசல் ரெளடிகள்... எதிர்ப்பு தெரிவிப்பவர்களை தீர்த்துக்கட்டவும் துணிந்தவர்கள்... இவர்களுக்கு அங்கிருந்து பெங்களூர் வரை ஒவ்வொரு கிலோ மீட்டர் வரைக்கும் அடியாட்கள் பட்டாளம் உண்டு. நாவலாக எழுத வேண்டிய இந்தக் கொடுமையை மேலே குறிப்பிட்ட பெயரில் சிறுகதையாக்கினேன்... மணியன் அவர்கள் புதிதாகத் துவங்கிய சிறுகதை இதழில் முதலாவது இதழிலேயே இது பிரசுரமாயிற்று...