பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

புரட்சி என்னும் சொல் அரசியலில் கலந்துவிட்ட பிறகு நாட்டில் உள்ளவர்கள் இழித்துரைத்தும் பழித்துரைத்தும் பலாத்காரத்தின் அடிப்படை, புரட்சி என்னும் விளக்கம் தருகின்றனர். விஞ்ஞான, இலக்கியத்திலேகூட எதிர்பாராத விதமாக புரட்சி ஏற்பட்டிருக்கிறது. சந்திர மண்டலத்தைப்பற்றி இதுவரை தெரிந்த உண்மையைக் காட்டிலும் புதிய உண்மைகளை திடீரென்று அளித்தது விஞ்ஞான இலக்கியத்தில் புரட்சி என்று கூறலாம்! உலகத்தைப்பற்றி கலிலியோ கண்டுபிடித்து கூறியதை மறுமலர்ச்சி என்று கொள்ளலாம்! அன்று அவர் விஞ்ஞானத்தில் ஏற்படுத்திய மறுமலர்ச்சி இன்றைய விஞ்ஞான புரட்சிக்கு வித்தாக அமைந்தது.

வளருகின்ற பயிருக்கு நல்ல வளர்ச்சி இருக்கவேண்டுமானால் உரம் போடுகிறோம். அதைப்போல் அன்றைய மறுமலர்ச்சி, இன்றைய புதிய விஞ்ஞான புரட்சிக்கு உரமாக அமைந்தது! இன்று மறுமலர்ச்சியும், புரட்சியும் ஒன்றுக்கொன்று தழுவிக் கொண்டிருக்கின்றன!

மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் இன்னும் அதிகமாக பெருகிட வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கூறினேன். மறுமலர்ச்சி மனதிலே இருந்துவிட்டால் மட்டும் போதாது? எழுத்தில், எழுதி அதை நடைமுறைக்கு அமைக்காதவர் மறுமலர்ச்சி எழுத்தாளர்களாகமாட்டார்கள்!

வேகமாகவும் எதிர்பாராத விதமாகவும் எடுத்துச் சொன்ன சில எழுத்தாளர்களை புரட்சி எழுத்தாளர்கள் என்று கூறினார்கள். புரட்சி என்னும் சொல் அரசியலில் கலந்துவிட்ட பிறகு சீர்திருத்த படங்களை புரட்சிப் படங்கள் என்றார்கள். மறுமலர்ச்சிக் கவிதைகளை தந்த பார்திதாசன் அவர்களை புரட்சிக் கவிஞர் என்று நாட்டுமக்கள் பாராட்டினார்கள்.