பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

ஆலாபனம் என்ற இசை நுணுக்கத்தைத் தமிழர் ஆலத்தி என்று அழைத்து வந்தனர். ஆரோகணம் அவரோகணம், கமகம், என்பன முறையே; ஏற்றம், இறக்கம், அலுக்கு என்ற பெயருடன் விளங்கின. தமிழர் அவைகளில் தேர்ச்சி பெற்று, தேன் தமிழை உண்டு வாழ்ந்து வந்தனர். இன்று, இரவல் இசை பெறும் நிலையில் உள்ளனர்.

எந்தப் பார்ப்பனர், மனு, 4-ம் அத்தியாயம், 15-ம் விதிப்படி இசை பயின்று; பொருள் ஈட்டக்கூடாது என்று தடுக்கப்பட்டு இருந்தனரோ, அதே ஆரியர்களின் சொத்தாக இசை இன்று கருதப்பட்டு வரும் நிலைமை ஏற்பட்டது.

அரியக்குடியார் அலறுகிறார்; பாபநாசம் சிவன் பதறுகிறார்; மருங்காபுரியார் மனவேதனைப்படுகிறார் என்று 'இந்துவும்' 'மித்திரனும்' முகாரி பாடியபடி உள்ளன. தமிழரின் அடாணா வெளிப்படும்வரை, இசைபற்றி இவர்கள் இறைச்சலிட்டபடி தான் இருப்பர்.

பாவ, ராக, தாளம் எனும் மூன்றும் இழைந்திருக்க வேண்டும் இசையிலே என்பர்; இசை நூல் வல்லோர் பாவம் விளக்கமாக இருக்க, அவரவருக்குப் புரியும் மொழியில் பாடல்கள் இருந்தாக வேண்டும். தமிழருக்குத் தமிழ் மொழியில் பாடல் இருந்தால் தான் புரியும்; சுவைக்க முடியும்; எனவே, தமிழ் நாட்டிலே தமிழ் இசைதான் முக்கியமாகத் தேவை.

தமிழரின் இசைப்பற்று, தியாகப்பர் காலத்துக்குப் பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தது. தெலுங்குக் கீர்த்தனங்கள் தோன்றா முன்னம் 'ராமகதையையோ, கிருஷ்ண கோலாகலத்தையோ', கீர்த்தனங்களாக அமைக்கு முன்னம், தமிழரின் இசை, இறைவன், இயற்கை, இன்பம் எனும் மூன்று துறைகளை உள்ளடக்கியதாக, உணர்ச்சியும் உற்சாகமும் தரத்தக்கதாக இருந்தது.

எ.தி.ஃப.6.