பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அதிக மரியாதை கிடைக்கும்!! அவ்வளவு, சனாதன நம்பிக்கையுள்ளவர்.

அவருக்கு இப்போது, ஒரு சிக்கல்! பக்கத்து கிராமத்துக்கு ஒரு கேசைப் பிடிக்கப் போகவேண்டும்—கொலைக்கேஸ் அல்ல! கலியாணக் கேஸ்!! ஆமாம் முதல்தாரம் இருக்கும்போது, இரண்டாம்தாரம் செய்து கொள்ள ஒருவர் முனைவதாகப் போலீஸ் இலாகாவுக்குத் தகவல் எட்டியிருக்கிறது. சட்டம் என்றால் சட்டம் தானே, அவருக்கு. அதனால் புறப்படப்போகிறார், கிராமத்துக்கு. சப்-இன்ஸ்பெக்டர், சம்பத்து ஒரு தினுசான ஆசாமி! அவருக்கு, பொன்னுசாமியைப்பற்றி, அதிகம் தெரியும்!!. கொஞ்சம், குறும்பு சுபாவம் உள்ளவர்.

அதனால் பொன்னுசாமி 'ஸ்டேஷனிலிருந்து' விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்குப் போகும்போது கூப்பிட்டார் அவரை.

"பொன்னுச்சாமி!"

"சார்...!"

"உனக்கு என்ன 'டூட்டி' ஞாபகம் இருக்கிறதா?"

"கிராமத்துக்குப் போய் இரண்டாம்தாரக் கலியாணத்தைத் தடுத்து அந்த ஆளை 'அரஸ்ட்' செய்து கொண்டு வரவேண்டிய டூட்டி சார்...!"

"ஊம்! உம்முடைய பத்து வருஷத்து சர்வீசிலே சட்டத்தை மீறிய யாரையும் நீர் பிடிக்காமல் விட்ட துண்டா?"

"கிடையாது சார்! இவருக்குச் சட்டம்னா சட்டம் தாங்க!"

"அதை மீறுகிற யாரையும் விடமாட்டீரே?"