பக்கம்:எனது நண்பர்கள்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  99

என முன்வந்தார். ஊரும் பெயரும் கேட்டேன். “காஞ்சிபுரம், அண்ணாத்துரை” என்று சொன்னார். ஒரு பெரிய அரசியல்வாதியின் பேச்சை பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளை விட்டு மொழி பெயர்ப்பது நல்லதல்ல என்று எனக்குத் தோன்றியது. நான் ஒப்பவில்லை. வழியில்லாததால் அப்பையனையே விட்டு மொழிபெயர்க்கச் செய்தேன். அப்பேச்சு கொட்டகையை அதிர வைத்தது. மொழி பெயர்ப்பும் அதற்கு இணையாக இருந்தது. நான் ஒரு பெரிய நல்ல காரியத்தைச் செய்து விட்டதாக எண்ணி இறுமாப்புடன், திரு. ஏ. ஆர். முதலியாரை அணுகி பையனின் மொழி பெயர்ப்பு எப்படி?’ என்று கேட்டேன். அதற்கு அவர் பையன் நன்றாக மொழி பெயர்த்தான். மொழி பெயர்ப்பில் ஆங்காங்கே சிறிது ‘சன்னப் பொடியும்’ கலந்திருந்தது’ என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

1968–ல் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மகாநாட்டில் நான் துணைத் தலைவனாக இருந்து பணி புரிந்தேன். அப்போது மவுண்ட் ரோடில் திரு. சி. என். அண்ணாதுரையின் சிலையை வைப்பது என்ற முடிவுக்கு வந்தோம். அதைத் திறந்து வைக்க ஏ. ஆர். முதலியார் மவுண்ட்ரோடிற்கு வந்தபோது, எட்டஇருந்த என்னைக் கைதட்டிக் கூப்பிட்டார். திருச்சி ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் அண்ணாதுரை மொழி பெயர்த்த போது “அப்பையன், பின்னால் நமது நாட்டிற்குத் தலைமை அமைச்சராக வருவார் என்றோ, அவருடைய சிலையை நாம் இருவரும் திறந்து வைக்கப் போகிறோம் என்றோ, நாம் நினைத்தோமா?” எனக் கூறி மகிழ்ந்தார். அவரது நினைவாற்றலைக் கண்டு நான் மகிழ்ந்தேன்.

1981–ல் நாட்டின் எதிர்கால அரசியல் சட்ட அமைப்பை முடிவு செய்யக் கூட்டப்பட்ட வட்டமேஜை மாநாட்டில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.